
மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சியின் தலைவருமான சிராக் பாஸ்வான் இன்று (ஜூலை 26) நிதிஷ் குமார் தலைமையிலான பிஹார் மாநில அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக, `மாநிலத்தில் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், கட்டுப்படுத்தப்படாத ஒரு ஆட்சியை ஆதரிப்பது வருத்தமளிக்கிறது’ என்று அவர் கூறினார்.
பிஹார் மாநிலம் கயாவில் நடைபெற்ற கட்சிப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிராக் பாஸ்வான் பேசியதாவது,
`சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பிறகும், நாட்டின் அனைத்து மாநிலங்களும் ஒன்றாக சுதந்திரமடைந்தபோதும், நமது அடிப்படைத் தேவைகள் பிரச்னைக்குரியவையாகவே இருக்கின்றன. தில்லி, மும்பை போன்ற நகரங்கள் தொடர்ந்து பிரகாசித்து வருகின்றன, ஆனால் எனது பிஹார் இன்னும் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றாக உள்ளது.
பொறுப்புணர்வை நிலைநாட்டி, 75 ஆண்டுகளுக்குப் பிறகும் பிஹாரை பின்தங்கிய நிலையில் வைத்திருப்பவர்களிடம் இருந்து பதில்களைக் கோருவதற்கான நேரம் இது’ என்றார்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஸ்வான், மாநிலம் முழுவதும் குற்றச் செயல்கள் நடைபெற்று வருவதாகவும், நிலைமையைக் கட்டுப்படுத்த நிர்வாகம் தவறிவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
`அரசு நிர்வாகம் குற்றவாளிகளுக்கு முன்பாக முற்றிலும் கீழ்ப்படிகிறது’ என்று பேசிய சிராக் பாஸ்வான், `பிஹாரில் கொலை, கொள்ளை, கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன, பிஹார் மக்கள் பாதுகாப்பாக உணருவதில்லை’ என்று கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
பிஹார் மாநில அரசியலுக்குத் திரும்புவதற்கான தனது விருப்பத்தை தன் கட்சியிடம் தெரிவித்துவிட்டதாகக் கூறிய பாஸ்வான், மாநிலத் தேர்தல்களில் பங்கேற்பது கட்சியை வலுப்படுத்துமா இல்லையா என்பதைப் பொறுத்தே இறுதி முடிவு இருக்கும் என்றும் கூறினார்.
மேலும், கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனது கட்சி 100% வெற்றியைப் பதிவு செய்துள்ளதாகவும், (நடப்பாண்டின் இறுதியில் நடைபெறவுள்ள) மாநில சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதை மீண்டும் நடத்திக்காட்ட விரும்புவதாகவும் தெரிவித்தார்.
பாஜக, ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) ஆகிய கட்சிகள் பிஹார் மாநில தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன.
நடப்பாண்டின் இறுதியில் பிஹார் சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் பதவி மீது சிராக் பாஸ்வான் கண் வைத்துள்ளதாகவும், அதற்கு பாஜகவின் மறைமுக ஆதரவு உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.