சட்டப்பிரிவு 370: ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

தீர்மானத்தின் மீது பேரவைத் தலைவர் அப்துல் ரஹிம் வாக்கெடுப்பு நடத்தினார். பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
சட்டப்பிரிவு 370: ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
ANI
2 min read

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்குவது தொடர்பாக சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்து வந்த அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு கடந்த 2019-ல் ரத்து செய்தது. இதன்பிறகு, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு-காஷ்மீரில் அண்மையில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி 49 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தன.

இதன்பிறகு, ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை கடந்த திங்கள்கிழமை கூடியது. சட்டப்பேரவைக் கூட்டத்தின் முதல் நாளன்று மக்கள் ஜனநாயகக் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் வஹீத் பாரா, அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார். பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அமளியில் ஈடுபட்டார்கள். இதனால், அன்றைய நாள் முழுக்க அவை ஒத்திவைக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் மூன்றாம் நாள் இன்று காலை கூடியது. அப்போது ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்தை வழங்குவது தொடர்பாக துணை முதல்வர் சுரிந்தர் சௌதரி தீர்மானம் கொண்டு வந்தார். தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவரும் சுகாதாரத் துறை அமைச்சருமான சகினா இடூ இதை வழிமொழிந்தார்.

தீர்மானத்தின் மீது பேரவைத் தலைவர் அப்துல் ரஹிம் வாக்கெடுப்பு நடத்தினார். பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவுடன் இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்துக்கு மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள், சுயேச்சை, ஜம்மு-காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சித் தலைவர் சஜத் லோன் உள்ளிட்டோரும் தீர்மானத்துக்கு ஆதரவு கொடுத்தார்கள்.

சிறப்பு அந்தஸ்தை வழங்குவது தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என சட்டப்பேரவை வலியுறுத்துவதாகத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். குறிப்பாக, அவை நடவடிக்கைகளை மாற்றியது தொடர்பாக அவர்கள் கேள்வியெழுப்பினார்கள். துணைநிலை ஆளுநர் உரை மீது விவாதம் நடைபெற வேண்டிய நேரத்தில் எப்படி தீர்மானம் கொண்டுவரப்பட்டது என்பது அவர்களுடையக் கேள்வியாக இருந்தது.

தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடன் பாஜக உறுப்பினர்கள் தொடர்ந்து எதிர்ப்புகளைப் பதிவு செய்து அமளியில் ஈடுபட்டார்கள். அவைத் தலைவர் 15 நிமிடங்களுக்கு அவையை ஒத்திவைத்தார். அவை மீண்டும் கூடியதும், பாஜக உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டு, அவைத் தலைவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள்.

பாஜக உறுப்பினரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான சுனில் ஷர்மா, "அமைச்சர்களை அழைத்து தீர்மானத்தை நீங்களே வடிவமைத்ததாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது" என்றார்.

தொடர் அமளியால், அவையை அடுத்து ஒரு மணி நேரத்துக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார். இதன்பிறகு, நாள் முழுக்க அவை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் அறிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in