

வாக்காளர் பட்டியலிலிருந்து வாக்காளர் பெயரை முறைகேடாக நீக்கிய குற்றச்சாட்டில், ஒரு பெயரை நீக்குவதற்கு விண்ணப்பிப்பதற்கு ரூ. 80 கட்டணம் பெறப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைக்கு 2023-ல் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலின்போது ஆலந்து சட்டப்பேரவைத் தொகுதியில் குறிப்பிடத்தக்க அளவில் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
இதைத் தொடர்ந்து, 256 வாக்கு மையங்களிலிருந்து 6,670 வாக்காளர்கள் பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து சட்டவிரோதமாக நீக்கப்பட்டதாக ஆலந்து சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பிஆர் பாட்டில் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
தேர்தல் ஆணையம் விளக்கமளிக்கையில், வாக்காளர் பெயரை நீக்கச் சொல்லி மொத்தம் 6,018 விண்ணப்பங்கள் வந்ததாகவும் அவற்றில் 24 விண்ணப்பங்களை மட்டுமே ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தது. மீதமுள்ள 5,994 விண்ணப்பங்களில் சரியான தகவல்கள் இல்லாததால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பெயர்கள் எதுவும் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படவில்லை.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க கர்நாடக அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது.
விசாரணைக் குழு நடத்திய விசாரணையில், கல்புர்கி மாவட்டத்திலுள்ள ஒரு தகவல் மையத்திலிருந்து வாக்காளர்கள் பெயரை நீக்கக்கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. வாக்காளர் பட்டியலிலிருந்து முறைகேடாக ஒரு வாக்காளர் பெயரை நீக்க ரூ. 80 பெறப்பட்டு, அதற்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, பாஜக முன்னாள் எம்எல்ஏ சுபாஷுக்குத் தொடர்புடைய இடங்களில் சிறப்பு விசாரணைக் குழு கடந்த வாரம் சோதனை நடத்தியிருந்தது.
Karnataka | Aland Constituency | SIT |