
ரூ. 2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்து 17 மாதங்கள் கடந்த பிறகும் சுமார் 6,970 கோடி மதிப்பிலான ரூ. 2000 நோட்டுகள் இன்னும் வங்கிக்குத் திரும்பவில்லை என இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த 8 நவம்பர் 2016-ல், அப்போது புழக்கத்தில் இருந்த ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்து பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது மத்திய அரசு. அதன்பிறகு 1934 இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தின் உட்பிரிவு 24(1)-ன் கீழ் புதிய வடிவத்திலான ரூ. 500 மற்றும் ரூ. 2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இதைத் தொடர்ந்து கடந்த 19 மே 2023-ல் அப்போது புழக்கத்தில் இருந்த ரூ. 2000 நோட்டுகளை திரும்பப்பெறுவதாக அறிவிப்பு வெளியானது. அந்த சமயத்தில் சுமார் ரூ. 3.56 லட்சம் கோடி மதிப்பிலான ரூ. 2000 நோட்டுகள் புழகத்தில் இருந்தன. இந்நிலையில் கடந்த 31 அக்டோபர் 2024 வரை மொத்தமே 98.04 சதவீத ரூ. 2000 நோட்டுகள் மட்டுமே திரும்பப் பெறப்படுள்ளதாக அறிவித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.
இதன் மூலம், ரூ. 6,970 கோடி மதிப்பிலான ரூ. 2000 நோட்டுகள் இன்னமும் ரிசர்வ் வங்கி வங்கிக்குத் திரும்பவில்லை எனத் தெரிகிறது. அதேநேரம், ரூ. 2000 நோட்டுகளை மாற்றிக்கொள்வதற்கான வசதி இந்தியா முழுவதும் உள்ள ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் கடந்த அக்.7-ல் ரூ. 2000 நோட்டுகளை வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தும் வகையிலான நடைமுறை முடிவுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த நடைமுறையை மீண்டும் நீட்டித்து அக்.9-ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மேலும், இந்தியாவில் உள்ள எந்த தபால் நிலையத்தில் இருந்தும், தங்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கும் வகையில் ரூ. 2000 நோட்டுகளை பொதுமக்கள் அனுப்பி வருகிறார்கள் எனவும் தகவல் தெரிவித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.