
ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டத்தில் இயங்கி வரும் ஒரு தொடக்கப் பள்ளிக் கட்டடத்தின் கூரை இன்று (ஜூலை 25) காலை இடிந்து விழுந்ததில், ஏழு மாணவர்கள் உயிரிழந்தனர், மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வகுப்பு நடந்துகொண்டிருந்தபோது இந்த துயர சம்பவம் நடந்தேறியுள்ளது.
விபத்து சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உள்ளூர்வாசிகளுடன் இணைந்து சம்மந்தப்பட்ட பிப்லோடி தொடக்கப் பள்ளியில் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்பதற்கான மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
20 ஆண்டுகள் பழமையான அந்த பள்ளிக் கட்டடத்தின் கூரை கல் பலகைகளால் அமைக்கப்பட்டிருந்தது. இந்த குறிப்பிட்ட அமைப்பு இடிபாடுகளின் தாக்கத்தை அதிகரித்துள்ளது.
`நான்கு குழந்தைகள் இறந்துள்ளனர், 17 பேர் காயமடைந்துள்ளனர். (மருத்துவ சிகிச்சைக்காக) பத்து குழந்தைகள் ஜலாவருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர், அவர்களில் மூன்று முதல் நான்கு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்’ என்று ஜலாவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அமித் குமார் முதற்கட்டமாக தகவல் தெரிவித்தார்.
இந்நிலையில், மொத்தம் 7 மாணவர்கள் வரை உயிரிழந்துள்ளதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. உயிரிழந்த அனைவரும் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட 7-ம் வகுப்பு மாணவர்கள் என்று கூறப்படுகிறது.
உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்து, பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியதாவது,
`ராஜஸ்தானின் ஜலாவரில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த விபத்து துயரமானது மற்றும் மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றனர்’ என்றார்.
சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை நேரில் சந்தித்து ஜலாவர் மாவட்ட ஆட்சியர் அஜய் சிங் ரத்தோர் நலம் விசாரித்தார்.