அமேதியில் போட்டியிட பிரியங்கா காந்தியின் கணவர் விருப்பம்?

உத்தரப் பிரதேசத்தில் 17 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் 14 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
அமேதியில் போட்டியிட பிரியங்கா காந்தியின் கணவர் விருப்பம்?
ANI

காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா அமேதியில் போட்டியிடுவது குறித்து விருப்பம் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் 17 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 63 தொகுதிகளில் இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜவாதி மற்றும் பிராந்தியக் கட்சிகள் போட்டியிடுகின்றன. 17 தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது.

அமேதி மற்றும் ரேபரலியில் காங்கிரஸ் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. ரேபரலியில் போட்டியிட்டு வந்த சோனியா காந்தி, மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்றுக்கொண்டார். கடந்தமுறை அமேதி மற்றும் கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிட்ட ராகுல் காந்தி வயநாட்டில் வெற்றி பெற்றார்.

2004 முதல் 2019 வரை அமேதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்த ராகுல் காந்தி, கடந்த முறை ஸ்மிருதி ராணியிடம் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ராகுல் காந்தி இந்த முறையும் வயநாட்டில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு, நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், அமேதியில் போட்டியிடுவது குறித்து பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா கருத்து தெரிவித்துள்ளார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ராபர்ட் வதேரா, "அமேதியில் கடந்த முறை வெற்றி பெற்றவர், காந்தி குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்துவதில் மட்டுமே கவனமாக உள்ளார். இந்தப் பகுதியின் வளர்ச்சி மற்றும் மக்கள் நலனை உறுதி செய்வது குறித்து அவர் எந்தக் கவலையும் கொள்ளவில்லை.

ரேபரலி, சுல்தான்பூர் மற்றும் அமேதியில் காந்தி குடும்பத்தினர் பல ஆண்டுகளாகக் கடுமையாக உழைத்துள்ளார்கள். ஆனால், தற்போதைய அமேதி எம்.பி. மக்களுக்கு சிக்கலைக் கொடுக்கிறார். அவரைத் தேர்ந்தெடுத்தது தவறு என மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள்.

தவறிழைத்துவிட்டதாக அமேதி மக்கள் உணர்ந்தால், காந்தி குடும்பத்தினர் தொகுதியின் பிரதிநிதியாக மீண்டும் வர வேண்டும் என மக்கள் விரும்பினால், பிரதிநிதியாக நான் இருக்க வேண்டும் என நினைத்தால், காங்கிரஸுக்கு அவர்கள் பெரிய வெற்றியை அளிப்பார்கள்" என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in