
பிஹார் சட்டமன்ற தேர்தல் வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடையும் நிலையில் வேட்பாளர் பட்டியலை ஆர்ஜேடி கட்சி வெளியிட்டது.
பிஹார் மாநில சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6 அன்றும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு நவம்பர் 11 அன்றும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இவற்றுக்கான வேட்புமனு தாக்கல் கடைசி நாள் இன்றுடன் முடிவடைகிறது.
பிஹார் தேர்தல் களத்தைப் பொறுத்தளவில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணி, தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஆகியவை பிரதானமாகக் களத்தில் உள்ளன.
ஏற்கெனவே பாஜக, ஐக்கிய ஜனதா தளம், ஜன் சுராஜ், லோக் ஜன்சக்தி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தங்கள் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டனர். ஆனால் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணியில் மட்டும் வேட்பாளரை அறிவிப்பதில் இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில், வேட்புமனு தாக்கல் நிறைவடையவுள்ள இன்று அதிரடியாக தேர்தலில் போட்டியிடும் 143 வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்தத் தேர்தல் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் வைஷாலி மாவட்டத்தின் ரகோபூர் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் முக்கிய தலைவர்களான ரேணு குஷ்வாஹா பிஹாரி கன்ச் தொகுதியிலும் அருண் குப்தா பர்ஹாரியா தொகுதியிலும் விஷால் ஜெய்ஸ்வால் மகாராஜ் கன்ச் தொகுதியிலும், லலித் யாதவ் தர்பங்கா தொகுதியிலும், திலீப் சிங் பரோலி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.