பிஹார் தேர்தல்: தேஜஸ்வி யாதவ் - காங்கிரஸ் பேச்சுவார்த்தை

"பாட்னாவில் ஏப்ரல் 17 அன்று மற்ற கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து மீண்டும் சந்திக்கவுள்ளோம்."
பிஹார் தேர்தல்: தேஜஸ்வி யாதவ் - காங்கிரஸ் பேச்சுவார்த்தை
ANI
1 min read

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் காங்கிரஸ் தலைமையைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பிஹாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் ஆகியோரைச் சந்தித்து தேஜஸ்வி யாதவ் தில்லியில் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

காங்கிரஸ் தலைமையிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தேஜஸ்வி யாதவ், "நாங்கள் சந்தித்து நேர்மறையான ஆலோசனைகளை மேற்கொண்டோம். பாட்னாவில் ஏப்ரல் 17 அன்று மற்ற கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து மீண்டும் சந்திக்கவுள்ளோம். தேர்தலை எதிர்கொள்ள முழுமையாகத் தயாராகவுள்ளோம். பிஹாரை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 20 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகும், பிஹார் ஏழை மாநிலமாக உள்ளது. தனிநபர் மற்றும் விவசாயிகளின் வருமானம் மிகக் குறைவாக உள்ளது. மக்கள் இடம்பெயர்வது அதிகமாக இருக்கிறது. பிஹார் சந்திக்கும் பிரச்னைகளின் அடிப்படையில் தேர்தலை எதிர்கொள்ள விரும்புகிறோம். அரசின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவது நம் அனைவரின் கடமை" என்றார் தேஜஸ்வி யாதவ்.

முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்குப் பதிலளித்த தேஜஸ்வி யாதவ், "நாங்கள் ஆலோசனை நடத்தி ஒருமனதாக முதல்வர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வோம். பிஹாரில் இம்முறை தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கப்போவதில்லை" என்றார் தேஜஸ்வி யாதவ்.

பிஹாருக்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிருஷ்ணா கூறுகையில், "ஏப்ரல் 17 அன்று பாட்னாவில் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் மேற்கொண்டு ஆலோசனைகள் நடைபெறவுள்ளன. பிஹார் தேர்தலில் இண்டியா கூட்டணி வெற்றி பெறும் என நம்புகிறோம்" என்றார்.

logo
Kizhakku News
kizhakkunews.in