பிஹார் தேர்தல்: இண்டியா கூட்டணி முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிப்பு | Bihar Election |

விஐபி கட்சியின் முகேஷ் சஹானி துணை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பு...
பிஹாரில் மெகா கூட்டணி செய்தியாளர் சந்திப்பு
பிஹாரில் மெகா கூட்டணி செய்தியாளர் சந்திப்புANI
1 min read

பிஹார் சட்டமன்ற தேர்தலில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவை இண்டியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் அறிவித்தார்.

பிஹார் மாநில சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6 அன்றும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு நவம்பர் 11 அன்றும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்தலில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் தலைமையிலான இண்டியா (மகாகட்பந்தன்) கூட்டணி, தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஆகியவை பிரதானமாகக் களத்தில் உள்ளன. இதற்கிடையில் மெகா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது. இதனால் சில தொகுதிகளில் இரண்டு கட்சிகளின் சார்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இண்டியா கூட்டணிக்குள் நிலவி வந்த சிக்கல்களைத் தீர்க்கும் விதமாக காங்கிரஸ் மூத்த தலைவரும் தேர்தல் பார்வையாளருமான அசோக் கெலாட் நேற்று (அக்.22) ஆர்ஜேடி தலைவர்கள் லாலு பிரசாத் யாதவ் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோரச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் இண்டியா கூட்டணிக்குள் எந்தக் குழப்பமும் இல்லை என்று கூறிய அவர், இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளிக்கப்படும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் பிஹாரில் இன்று இண்டியா கூட்டணி கட்சிகளின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் கூறியதாவது:-

“நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இயங்கும் விதம், ஜனநாயகத்திற்கு அபாயகரமானது. நாடு எந்தத் திசையில் சென்றுகொண்டிருக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. விமர்சனம் செய்பவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இதை மனதில் கொண்டு செயல்பட வேண்டியது நமது கடமை. பிஹாரில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டத்தை நாடு கவனித்துக் கொண்டிருக்கிறது. இந்த மாநிலத்திற்கு மாற்றம் தேவை.

பிஹாரின் தற்போதைய நிலை வருந்தத்தக்க விதத்தில் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரிடம் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் இதனை அறிவிக்கிறேன். பிஹார் தேர்தலில் இண்டியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் களம் காண்பார். இளம் தலைவரான தேஜஸ்வி யாதவுக்கு நீண்ட வருங்காலம் உள்ளது. அவரை மக்கள் ஆதரிப்பார்கள். விஐபி கட்சியின் முகேஷ் சஹானியை துணை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கிறோம். இண்டியா கூட்டணி வலுவாகவும் ஒற்றுமையுடனும் உள்ளது” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in