
ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி.) கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவின் 78-வது பிறந்த தினம் கடந்த வாரம் பீஹார் தலைநகர் பட்னாவில் கொண்டாடப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட ஒரு காணொளி வெளியாகி பீஹாரில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு நாற்காலியில் அமர்ந்த லாலு பிரசாத் யாதவ், எதிரே இருந்த மற்றொரு நாற்காலியில் கால்களை நீட்டியிருந்தார். அப்போது, அம்பேத்கர் உருவப் படத்துடன் அங்கே வந்த ஒரு தொண்டர், அந்த படத்தை லாலுவின் காலுக்கு அருகே வைத்து பிடித்தபடி, அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இந்த காணொளி பீஹார் அரசியலில் தற்போது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அம்பேத்கருக்கு லாலு பிரசாத் யாதவ் அவமரியாதையை ஏற்படுத்திவிட்டதாகவும், அந்த புகைப்படத்தை அவர் துளியும் சட்டைசெய்யவில்லை என்றும் ஐக்கிய ஜனதா தளமும், பாஜகவும் கடுமையாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.
குறிப்பாக, `தலித் விரோதி ஆர்.ஜே.டி.’ போன்ற ஹேஷ்டேக்குகளை சமூக ஊடகங்களில் பயன்படுத்தி இந்த காணொளியை பாஜக தீவிரமாக விளம்பரப்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்காமல் லாலு பிரசாத் யாதவ் நாட்களைக் கடத்துவதாகவும், இதற்கு அவரது `பெருமையே காரணம்’ என்றும் பாஜக குற்றம்சாட்டிள்ளது.
இது தொடர்பாக விளக்கமளித்துள்ள லாலு பிரசாத் யாதவின் மகனும், அம்மாநில எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ், `இது ஒரு பிரச்னையே இல்லை. யாரும் யாரையும் அவமதிக்கவில்லை’ என்றார்.
எனினும், இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள பீஹார் மாநில எஸ்.சி. ஆணையம், இது தொடர்பாக 15 நாள்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு லாலு பிரசாத் யாதவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.