
மஹாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி, ஆளும் மஹாயுதி கூட்டணியும், எதிர்கட்சிகளைக் கொண்ட மஹாவிகாஸ் அகாதி கூட்டணியும் தங்களின் தேர்தல் வாக்குறுதியில் மகளிர் உரிமைத் தொகை குறித்து அறிவித்துள்ளன.
288 இடங்களைக் கொண்ட மஹாராஷ்டிரா சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வரும் நவம்பர் 20-ல் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் நவம்பர் 23-ல் எண்ணப்படுகின்றன.
பாஜக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) ஆகிய கட்சிகள் மஹாயுதி கூட்டணி என்ற பெயரிலும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) ஆகிய கட்சிகள் மஹாவிகாஸ் அகாதி கூட்டணி என்ற பெயரிலும் இந்தத் தேர்தலை சந்திக்கின்றன.
இந்நிலையில், மஹாராஷ்டிரா தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் வாக்குறுதி புத்தகத்தை இன்று மும்பையில் வெளியிட்டார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. அதில் விவசாயக் கடன் ரத்து, அடுத்த ஐந்தாண்டுகளில் இளைஞர்களுக்காக 25 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம் போன்ற முக்கிய அறிவிப்புகள் இருந்தன.
மேலும் தற்போது ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசால் அம்மாநில மகளிருக்கு மாதம் ரூ. 1,500 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை ரூ. 2,100 ஆக உயர்த்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம், காங்கிரஸ் தலைமையிலான மஹா விகாஸ் அகாதி கூட்டணியின் கூட்டான தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே. அதில், ரூ. 3 லட்சம் வரை விவசாயக் கடன் ரத்து, மகளிருக்கு இலவச பேருந்து பயணம், 12.5 லட்சம் வேலைகள் உருவாக்கம், சாதிவாரி கணக்கெடுப்பு, வேலையில்லா இளைஞர்களுக்கான உதவித்தொகை போன்ற அறிவிப்புகள் இடம்பெற்றன.
மிக முக்கியமாக, மஹாலட்சுமி திட்டத்தின் கீழ் அம்மாநில மகளிருக்கு உதவித்தொகையாக மாதம் ரூ. 3000 வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.