18வது மக்களவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் குண்டூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சந்திரசேகர் பெம்மசானி, மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் தொலை தொடர்பு இணை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.
நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள சந்திரசேகர் பெம்மசானி 5705 கோடி சொத்துகளுடன் மோடி அமைச்சரவையின் பணக்கார அமைச்சராக உள்ளார்.
1976-ல் ஆந்திர மாநிலத்தில் பிறந்த பெம்மசானி, தன் இளநிலை மருத்துவப் படிப்பை ஆந்திர மாநிலம் விஜயவாடா அரசு மருத்துவப் பல்கலைக்கழகத்திலும், முதுகலை மருத்துவப் படிப்பை அமெரிக்க நாட்டின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள கெய்சிங்கர் மருத்துவக் கல்லூரியிலும் முடித்தார்.
இதன் பிறகு அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் `ஜான் ஹாப்கின்ஸ் பல்கழைக்கழகத்தில்’ வேலைபார்த்த பெம்மசானி, `யு வேர்ல்ட்’ என்ற பெயரில் நுழைவுத்தேர்வு பயிற்சி மையத்தை அமெரிக்காவில் நடத்தி வருகிறார்.
டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு மருத்துவ ரீதியிலான உதவிகளைச் செய்துள்ள பெம்மசானி, தன் சொந்த செலவில் குண்டூர் மாவட்ட மக்களுக்குக் குடிநீர் வழங்கும் திட்டத்தையும், ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி சம்மந்தப்பட்ட உதவிகளையும் செய்துள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சியின் அயலக அணியில் பணியாற்றி வந்த பெம்மசானி, முதல் முறையாக இந்த மக்களவைத் தேர்தலில்தான் போட்டியிட்டார். போட்டியிட்டு வெற்றிபெற்றவுடன் மத்திய அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். நாட்டின் பணக்கார அமைச்சராக இருந்தாலும் பெம்மசானிக்கு 1038 கோடி கடன் உள்ளது.