கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனை முன்னாள் முதல்வர் கைது
கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிதி முறைகேடு வழக்கில், மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆர்ஜி கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மேற்கு வங்கம் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. இந்த வழக்கில், பயிற்சி மருத்துவரின் உடல் மருத்துவமனையில் கண்டறியப்பட்டவுடன் அலட்சியப் போக்கைக் காட்டியதாகவும், காவல் துறையிடம் புகாரளிக்கத் தவறியதாகவும் ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு விசாரணையின் பகுதியாக சந்தீப் கோஷிடம் சிபிஐ உண்மைக் கண்டறியும் சோதனை நடத்தியது.
இதனிடையே, 2021 முதல் அரசு மருத்துவமனைகளில் நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் லஞ்சப் புகார்கள் தொடர்பாக சந்தீப் கோஷ் மீது பணமோசடி வழக்கு விசாரணையை அமலாக்கத் துறை நடத்தி வருகிறது. கொல்கத்தா காவல் துறை மற்றும் சிபிஐயின் வழக்குப்பதிவுகளின் அடிப்படையில் அமலாக்கத் துறை இந்த விசாரணையைத் தொடங்கியது.
வழக்கு தொடர்பாக கொல்கத்தாவில் சந்தீப் கோஷுக்குத் தொடர்புடைய பல்வேறு இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது. ஒப்பந்ததாரர்கள் சிலரது இடங்களிலும் சிபிஐ சோதனை நடத்தியது.
பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை, மருத்துவமனையில் நடைபெற்றுள்ள நிதி முறைகேடுகள் தொடர்பாக என சிபிஐ இரு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. சந்தீப் கோஷ் மற்றும் இவருக்குத் தொடர்புடையவர்களிடம் 2021 முதல் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தது. இதனிடையே, இந்திய மருத்துவச் சங்கத்திலிருந்து சந்தீப் கோஷ் நீக்கப்பட்டார்.
இந்த நிலையில், சந்தீப் கோஷிடம் தொடர்ந்து 15 நாள்களாக விசாரணை நடத்தி வந்த நிலையில் சிபிஐ நேற்று அவரைக் கைது செய்தது. இவரது கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, சந்தீப் கோஷின் பாதுகாப்பு அதிகாரி மற்றும் ஆர்ஜி கர் மருத்துவமனைக்குப் பொருள்களை விநியோகம் செய்யும் இருவர் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார்கள்.