
கிரிமிலேயர் வருமான உச்சவரம்பை திருத்துவதற்கான பரிந்துரையை நேற்று (ஆக. 8) மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை வழியாக பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (ஓபிசி) நலனுக்கான நாடாளுமன்றக் குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை காலத்தின் தேவை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நடப்பாண்டின் ஏப்ரல் மாதம் தாக்கல் செய்த ஒரு அறிக்கையில் இதே பரிந்துரையை நாடாளுமன்ற குழு முதன்முதலில் வழங்கியது.
நேற்று (ஆக. 8) தாக்கல் செய்யப்பட்ட `நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையில்’, அதே பரிந்துரையை மீண்டும் நாடாளுமன்ற குழு வலியுறுத்திய போதிலும், `தற்போது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கிரிமிலேயர் வருமான உச்சவரம்பை மேலும் திருத்துவதற்கான எந்த திட்டமும் பரிசீலனையில் இல்லை’ என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு அமைச்சகம் (MoSJE) பதிலளித்துள்ளது.
மத்திய அரசின் பதிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள நாடாளுமன்ற குழு, `குறைந்த வருமானத்தைக் கொண்ட குழுக்களை சேர்ந்த தனிநபர்களின் அடிப்படை வருமான அதிகரிப்பு மற்றும் பணவீக்க குறியீட்டின் அதிகரிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும்போது தற்போது அமலில் உள்ள ரூ. 8 லட்ச வருமான உச்சவரம்பு போதுமானதாக இல்லை’ என்று கூறியுள்ளது.
கடைசியாக கடந்த 2017-ல் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி, இடஒதுக்கீடு பெறுவதற்கான பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (ஓபிசி) வருமான வரம்பு ஆண்டுக்கு ரூ. 6.5 லட்சத்தில் இருந்து ரூ. 8 லட்சமாக உயர்த்தப்பட்டது.
மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை (DoPT) கடந்த செப்டம்பர் 1993-ல் வெளியிட்ட உத்தரவின்படி, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கிரிமிலேயரை நிர்ணயிப்பதற்கான வருமான உச்சவரம்பு ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் அல்லது நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பே உயர்த்தப்படவேண்டும்.