
வழக்கமாக பின்பற்றப்படும் மரபை ஒதுக்கி வைத்து, கடைசி பணி நாளில் 10 தீர்ப்புகள் வழங்கியுள்ளார் உச்ச நீதிமன்ற நீதிபதி அபய் எஸ். ஓகா.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வரிசையில் மூன்றாவது மூத்த நீதிபதியாக உள்ள அபய் எஸ். ஓகா நாளை (மே 24) பணி ஓய்வு பெறுகிறார். அவரது கடைசி பணி நாளான இன்று, மரபை ஒதுக்கி வைத்து, தான் விசாரித்து வந்த 10 வழக்குகளில் தீர்ப்பு வழங்கினார். இதற்கும் 2 நாள்களுக்கு முன்புதான் அவரது தாயார் மரணமடைந்தார்.
உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் பேசிய நீதிபதி ஓகா, `ஓய்வுபெறும் நீதிபதி கடைசி நாளில் பணிபுரியக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் பின்பற்றப்படும் மரபை நான் ஏற்கவில்லை. அந்த மரபிலிருந்து விடுபட நமக்கு சில காலம் ஆகும். ஆனால் கடைசி (பணி) நாளில், வழக்கமான ஒரு அமர்வில் வைத்து சில தீர்ப்புகளை நான் வழங்குவேன் என்பதில் எனக்கு திருப்தி இருக்கிறது’ என்றார்.
மேலும், ஓய்வு என்ற வார்த்தையை தாம் வெறுப்பதாகவும், ஓய்வைப் பற்றி யோசிப்பதற்கு பதிலாக கடைசி சில மாதங்களில் அதிகப்படியான வேலைகளில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்தார். தேசத்திற்கான அவரது சேவைக்காக உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் அவருக்கு நன்றி தெரிவித்தது.
1960-ல் மஹாராஷ்டிர மாநிலத்தில் பிறந்த ஓகா, சட்டப் படிப்பை முடித்த கையோடு 1983-ல் வழக்கறிஞராக பதிவு செய்துகொண்டார். தானே மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றத் தொடங்கிய ஓகா, 2003-ல் மும்பை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
2005-ல் நிரந்தர நீதிபதியான ஓகா, 2019-ல் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து 2021-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியானார். தனியுரிமை மற்றும் பேச்சு சுதந்திரத்தை பாதுகாக்கும் தீர்ப்புகளுக்கு நீதிபதி ஓகா பெயர் பெற்றவர்.
கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஓகா இருந்தபோது, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களைத் தடுக்க பெங்களூரு காவல்துறை விதித்த தடை உத்தரவுகளை அவர் தலைமையிலான அமர்வு சட்டவிரோதமானதாக அறிவித்தது.
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை விமர்சித்து மஹாராஷ்டிரத்தைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர் ஒருவர் வாட்ஸ் அப் பதிவிட்டதற்காகவும், பாகிஸ்தானுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்ததற்காகவும், அவர் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரை. உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஓகா ரத்து செய்தார்.