
மத அடிப்படையில் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை வழங்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்த குற்றச்சாட்டை அடுத்து, இந்த விவகாரம் குறித்து பதிலளித்துள்ளது கர்நாடக முதல்வர் அலுவலகம்.
ஜார்க்கண்ட மாநில சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை (நவ.12) நடைபெறவுள்ளது. தேர்தல் பரப்புரையின்போது ஜார்க்கண்ட் மாநிலம் பலாமுவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் அமித்ஷா, `இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் வகையில் ஓ.பி.சி.க்கள், தலித்துகள், பழங்குடியினர் ஆகியோரின் இடஒதுக்கீட்டை குறைக்க முடிவு செய்துள்ளது காங்கிரஸ் கட்சி
இடஒதுக்கீடு குறித்து பேசிவருகிறது காங்கிரஸ். ஆனால் மத அடிப்படை இடஒதுக்கீடு வழங்குவதற்கு நம் அரசியலமைப்பு சட்டத்தில் இடமில்லை. மஹாராஷ்டிராவில் தங்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை வழங்குமாறு சில உலேமாக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களுக்கு உதவி செய்வதாக காங்கிரஸ் கட்சி உறுதியளித்துள்ளது. பாஜக நாட்டில் இருக்கும் வரை மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படாது’ என்றார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் ஓபிசிகளாக வகைப்படுத்த கர்நாடக அரசு எடுத்த முடிவுக்காக ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதத்தில் பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஆணையம் கேள்வி எழுப்பியது.
இந்நிலையில் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு சர்ச்சை குறித்து, `இடஒதுக்கீடு குறித்த கோரிக்கை எழுப்பப்பட்டது உண்மைதான். ஆனால் இதை நடைமுறைப்படுத்துவதற்கான எந்த ஒரு கருத்துருவும் அரசிடம் இல்லை’ என இன்று (நவ.12) செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது கர்நாடக முதல்வர் அலுவலகம்.