
ஆற்றில் காணாமல் போனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
வயநாடு நிலச்சரிவு தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விடி சதீசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.
இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பினராயி விஜயன் கூறியதாவது:
"இன்று உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்தது, அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார்கள். தனித்து இருப்பவர்களை மீட்பதுதான் எங்களுடையக் குறிக்கோள். ராணுவப் படையினரின் முயற்சிகளுக்குப் பாராட்டுகள். சிக்கியிருந்த பலர் மீட்கப்பட்டுள்ளதாக அவர்கள் தகவல் தெரிவித்தார்கள். மண்ணில் புதையுண்டவர்களை மீட்பது கடினமாக உள்ளது.
ஆற்றில் காணாமல் போனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறும். மீட்கப்பட்டவர்கள் தற்காலிகமாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். மறுகட்டமைப்புப் பணிகள் விரைவில் நடைபெறும். முகாம்களில் உள்ள மக்களைச் சந்தித்து படம்பிடிக்க வேண்டாம் என ஊடகங்களுக்குக் கோரிக்கை வைக்கிறேன். முகாம்களுக்கு வெளியே அவர்களுடன் உரையாடுங்கள். அவர்களது தனியுரிமையைப் பாதுகாப்பது அவசியம்.
பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர்களுக்கு உளவியல் ரீதியான உதவிகளை வழங்குவது மிக முக்கியம். தொற்று பரவுவதைத் தடுக்க வேண்டும். மனிதர்கள் மட்டுமல்ல, நிறைய விலங்குகளும் இதில் உயிரிழந்துள்ளன. அனைவரையும் முறையாக அடக்கம் செய்ய வேண்டியுள்ளது. 4 அமைச்சர்கள் கொண்ட குழு இங்கு முகாமிட்டு, செயல்பாடுகளை ஒருங்கிணைப்பார்கள். சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு அரசாங்கம் மீண்டும் சான்றிதழ்களை விநியோகம் செய்யும்" என்றார் பினராயி விஜயன்.