
நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்குப் பிணை வழங்கி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிலமோசடி மற்றும் பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவருமான ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரியில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, ஹேமந்த் சோரன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டு, முதல்வர் பொறுப்பை ஏற்றார். சம்பாய் சோரன் 47 எம்எல்ஏ-க்கள் ஆதரவுடன் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தார்.
ஹேமந்த் சோரன் பிணை கோரி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தனி நீதிபதி ரோங்கன் முகோபத்யாய் அமர்வு பிணை கோரிய மனுவை விசாரித்தது. வழக்கு விசாரணை ஜூன் 13-ல் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று பிணை வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு தடங்கல்களுக்குப் பிறகு சோரனுக்கு இந்த நிவாரணம் கிடைத்துள்ளது. முன்னதாக, ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் சோரனுக்குப் பிணை வழங்க மறுத்தது. இவரது கைது நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மக்களவைத் தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக இடைக்காலப் பிணை கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். உச்ச நீதிமன்றமும் இவரது மனுவை நிராகரித்தது.
ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் இவருக்குப் பிணை வழங்கியுள்ளதன் மூலம், பிர்சா முண்டா சிறையிலிருந்து அவர் வெளியே வந்தார். ஏராளமான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தொண்டர்கள் ஹேமந்த் சோரனை உற்சாகமாக வரவேற்றார்கள்.