

தமிழ்நாட்டின் பிரபலமான பருப்பு உற்பத்தியாளரான உதயம் நிறுவனத்தின் அதிகமான பங்குகளை ரிலையன்ஸ் நிறுவனத்தின் நுகர்வோர் பொருள்கள் பிரிவு வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ், தற்போது அதிவேகமாக நகரும் நுகர்வோர் பொருள்கள் (எஃப்.எம்.சி.ஜி) துறையில் தனது அடுத்த படியை எடுத்து வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதன் முக்கிய நடவடிக்கையாக அந்நிறுவனத்தின் நுகர்வோர் பொருள்கள் பிரிவு, தமிழ்நாட்டின் பிரபலமான பருப்பு உற்பத்தியாளரான உதயம் நிறுவனத்தில் பாதிக்கும் அதிகமான பங்குகளை வாங்கி, நிறுவனத்தைத் தன் வசமாக்கியுள்ளது. இதன்மூலம் நுகர்வோர் பொருள்கள் துறையில் பிரபலமாக உள்ள டாடா, எம்.டி.ஆர் உள்ளிட்டவற்றுக்கு நேரடி போட்டியாளராக ரிலையன்ஸ் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ரிலையன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“ரிலையன்ஸ் நிறுவனத்தின் நுகர்வோர் பொருள்கள் தயாரிப்புப் பிரிவு உதயம்ஸ் அக்ரோ ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் பெரும்பான்மையான பங்குகளை வாங்கியுள்ளது. கூட்டு முயற்சி ஒப்பந்தத்தின் கீழ், ரிலையன்ஸ் பெரும்பான்மையான பங்குகளை வைத்திருக்கிறது. அதே நேரத்தில் உதயம்ஸின் முன்னாள் உரிமையாளர்கள் நிறுவனத்தில் சிறுபான்மை பங்குகளை வைத்திருக்கிறார்கள். இந்த ஒப்பந்தம் தமிழ்நாட்டின் பாரம்பரிய ஊட்டச்சத்து பிராண்டான உதயத்தை ரிலையன்ஸின் கீழ் கொண்டுவருகிறது. இது ரிலையன்ஸின் அதிவேகமாக நகரும் நுகர்வோர் பொருள்கள் (எஃப்.எம்.சி.ஜி) பிரிவுக்கு பலம் சேர்க்கிறது. இதன்மூலம் ரிலையன்ஸ் இந்தியாவின் பாரம்பரிய பிராண்டுகளை மேம்படுத்தும் நடவடிக்கையை உறுதி செய்கிறது. மேலும், நாடு முழுவதும் நுகர்வோர்க்கு மலிவு விலையில் உலகளாவிய தரத்தை வழங்குவதற்கான ரிலையன்ஸின் முயற்சியையும் இது வலுப்படுத்துகிறது.
இதுகுறித்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் நுகர்வோர் தயாரிப்புகள் பிரிவின் இயக்குநர் டி. கிருஷ்ணகுமார் கூறுகையில், ”அறிமுகம் தேவையில்லாத பிராண்டான உதயம் பல தசாப்தங்களாக நுகர்வோருக்கு ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளை வழங்கி வருகிறது. நுகர்வோர் பொருள்கள் துறையில் ரிலையன்ஸ் தனது இருப்பை மேலும் வலுப்படுத்துவதால் இந்தக் கூட்டு முயற்சியை அறிவிப்பதில் நாங்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறோம். உதயம் விரைவில் ஒரு தேசிய பிராண்டாக உயர்ந்து இந்தியா முழுவதும் உள்ள நுகர்வோரை திருப்திப்படுத்தும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று கூறியுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Reliance Consumer Products Limited (RCPL), the FMCG arm of Reliance Industries Limited, has acquired a majority stake in Udhaiyams Agro Foods Private Limited.