
தில்லி முதல்வராகப் பதவியேற்றார் பாஜகவைச் சேர்ந்த ரேகா குப்தா.
70 இடங்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு அண்மையில் நடந்த தேர்தலில், 48 இடங்களில் வென்றது பாஜக. 26 ஆண்டுகள் கழித்து தில்லியில் ஆட்சியைக் கைப்பற்றிய சூழலில், முதல்வர் பதவிக்கான நபரை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனை பாஜக அதிகார மட்டத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், நேற்று (பிப்.19) நடைபெற்ற பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில், முதல்வர் பதவிக்கு ஒருமனதாகத் தேர்தெடுக்கப்பட்டார் ஷாலிமார் பாக் தொகுதி எம்.எல்.ஏ. ரேகா குப்தா. மேலும், முதல்வர் பதவிக்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பர்வேஷ் வர்மாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், இன்று (பிப்.20) காலை தில்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற விழாவில், தில்லி முதல்வராக ரேகா குப்தாவுக்குப் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார் துணை நிலை ஆளுநர் வி.கே. சக்ஸேனா. இதன் மூலம் சுஷ்மா ஸ்வராஜ், ஷீலா தீக்ஷித், ஆதிஷி ஆகியோருக்குப் பிறகு தில்லியின் 4-வது பெண் முதல்வராகியுள்ளார் ரேகா குப்தா.
இதை தொடர்ந்து, துணை முதல்வராக பர்வேஷ் வர்மாவும், அமைச்சர்களாக கபில் மிஸ்ரா, மஞ்சிந்தர் சிங் சிர்சா, ரவீந்திர ராஜ், ஆஷிஷ் சூட், பங்கஜ் குமார் சிங் ஆகியோரும் பதவியேற்றுக்கொண்டார்கள்.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில பாஜக முதல்வர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.