
மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் தரப்பில் வெளியிட்ட புதிய அறிவிப்பின்படி, பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் மற்றும் அந்நாட்டு விமானங்கள் இந்திய வான்வெளிக்குள் நுழைவதற்கான தடை செப்டம்பர் 24-ம் தேதி அதிகாலை வரை (ஒரு மாத காலம்) நீட்டிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டு வான்வெளியில் இந்திய விமானங்கள் மற்றும் விமான நிறுவனங்கள் நுழைவுதற்கான தடையை, நோட்டாம் (விமானங்களை இயக்குபவர்களுக்கான அறிவிப்பு - NOTAM) வழியாக பாகிஸ்தான் அரசு இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. இந்நிலையில், வான்வெளியில் நுழைவதற்கான தடையை நோட்டாம் வழியாக மத்திய அரசு இன்று (ஆக. 23) நீட்டித்துள்ளது.
இந்த நீட்டிப்புகளால், அண்டை நாட்டு விமானங்களுக்கான இரு நாடுகளின் வான்வெளி மூடல் நடவடிக்கைகள் ஐந்தாவது மாதத்தில் நுழைந்துள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்தன. இதனால் ஏப்ரல் 24 அன்று தனது வான்வெளியை பாகிஸ்தான் மூடியது. இதற்கு பதிலடி அளிக்கும் விதமாக ஏப்ரல் 30 அன்று இந்திய வான்வெளி மூடப்பட்டுள்ளது.
அப்போது இருந்து, மாதாந்திர அடிப்படையில் இரு நாடுகளும் நோட்டாம் அறிவிக்கைகளை வெளியிட்டு, வான்வெளி மூடலை நீட்டித்து வருகின்றன.
பாகிஸ்தானின் வான்வெளி மூடப்பட்டுள்ளதால், இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் சுமார் 800 வாராந்திர விமானங்கள் பாதிப்பை சந்தித்துள்ளன.
பொதுவாக வட இந்தியாவில் இருந்து மேற்கு ஆசியா, மத்திய ஐரோப்பா, ஐரோப்பா, இங்கிலாந்து மற்றும் கிழக்கு வட அமெரிக்கா போன்ற இடங்களுக்கு பயணிக்கும் இந்த விமானங்கள் தற்போது வேறு வழித்தடங்கள் வழியாக நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.