
எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் மாநிலங்களவை தலைவர் பாரபட்டசமாக நடந்துகொள்வதால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் வழங்கியதாக செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்துள்ளார் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே.
மாநிலங்களவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சார்பில் மாநிலங்களவை தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான ஜக்தீப் தங்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர நேற்று (டிச.10) நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இண்டியா கூட்டணி கட்சி எம்.பி.க்களுடன் இணைந்து தில்லி கான்ஸ்டிடியூசன் கிளப்பில் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே பேசியவை பின்வருமாறு,
`அவர் (ஜக்தீப் தங்கர்) பள்ளி முதல்வர் போல நடந்துகொள்கிறார். எதிர்க்கட்சிகள் சார்பில் ஏதாவது முக்கிய விவகாரங்கள் குறித்து எழுப்ப முயலும்போது, அதற்கு அவர் அனுமதி அளிப்பதில்லை. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அவரது அடுத்த கட்ட பதவி உயர்வுக்காக ஆளுங்கட்சியின் செய்தித் தொடர்பாளராக நடந்துகொள்வது எங்களுக்கு நன்றாகத் தெரிகிறது.
துணை குடியரசுத் தலைவர் பதவி என்பது இந்தியாவின் இரண்டாவது பெரிய அரசியலமைப்புப் பதவியாகும். 1952-ல் இருந்து துணை குடியரசுத் தலைவருக்கு எதிராக இதுவரை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது கிடையாது. ஏனென்றால் இதுவரை அந்தப் பதவியில் இருந்த நபர்கள் நடுநிலை தவறாமல், அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட்டுள்ளனர்.
விதிகளின்படி அவர்களை அவையை வழிநடத்தினர்கள். ஆனால் விதிகளைவிட அரசியலுக்கு தற்போது அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. நாடாளுமன்ற ஜனநாயகத்தின் வரலாற்றில் இப்படிப்பட்ட ஒரு சூழலுக்கு அவர் காரணமாகியுள்ளதால், நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவர நாங்கள் நோட்டீஸ் அளித்துள்ளோம்’ என்றார்.
எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துள்ள மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கிரண் ரிஜிஜூ, `அவை தலைவருக்கான தகுந்த மரியாதையை அளிக்காதவர்கள் அவை உறுப்பினர்களாக இருக்க உரிமை இல்லை. நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க நாங்கள் உறுதிமொழி ஏற்றிருக்கிறோம். இந்த நோட்டீஸ் நாடகம் வெற்றி பெற நாங்கள் அனுமதிக்கமாட்டோம்’ என்றார்.