அனைத்து மதங்களுக்காக உயிரையும் தியாகம் செய்யத் தயார்: மமதா பானர்ஜி

சாமானியர்கள் குழப்பங்களை உருவாக்குவதில்லை, ஆனால் அரசியல் கட்சிகள் அதை செய்கின்றன. இன்று சிவப்பும் காவியும் ஒன்றாகிவிட்டன.
அனைத்து மதங்களுக்காக உயிரையும் தியாகம் செய்யத் தயார்: மமதா பானர்ஜி
ANI
1 min read

கலவரங்கள் நிகழாமல் தடுப்பதில் மேற்கு வங்க அரசு கவனம் செலுத்துகிறது என்றும், அனைத்து மதங்களுக்காக உயிரையும் தியாகம் செய்ய நாங்கள் தயார் என்றும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பேசியுள்ளார்.

கடந்த மார்ச் 27-ல், மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் உள்ள மொதபாரி பகுதியில் இரண்டு குழுக்களிடையே வன்முறை வெடித்தது. இது தொடர்பாக இதுவரை 61 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளார்கள். வன்முறை மேலும் பரவாமல் தடுக்கும் வகையில், அப்பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில், ரமலானை முன்னிட்டு கொல்கத்தாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி. நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,

`அனைத்து மதங்களுக்காக எங்கள் உயிரையும் தியாகம் செய்யவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். சிறுபான்மையினரைப் பாதுகாப்பது பெரும்பான்மையினரின் கடமை, பெரும்பான்மையினருடன் இருப்பது சிறுபான்மையினரின் கடமை. கலவரத்தில் ஈடுபட யாரையும் அனுமதிக்கமாட்டோம். எங்களிடம் ஒரே ஒரு குரல் மட்டுமே உள்ளது, அது கலவரங்களை நிறுத்துவது.

நாங்கள் மதச்சார்பற்றவர்கள். நவராத்திரி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது; அதற்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன், அதேநேரம் யாரும் குழப்பங்களை ஏற்படுத்துவதை நாங்கள் விரும்பவில்லை. சாமானியர்கள் குழப்பங்களை உருவாக்குவதில்லை, ஆனால் அரசியல் கட்சிகள் அதை செய்கின்றன. இன்று சிவப்பும் காவியும் ஒன்றாகிவிட்டன. அது அப்படியே இருக்கட்டும். இது அவமானகரமான விஷயம்’ என்றார்.

மொதபாரி வன்முறையைக் கண்டித்து மேற்கு வங்க மாநில பாஜக, கடந்த 28-ல் போராட்டம் நடத்திய நிலையில், தற்போது அங்கு சூழல் கட்டுக்குள் உள்ளதாகவும், வன்முறை தொடர்பாக 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை கூடுதல் டிஜிபி ஜாவித் ஷமிம் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in