
மிகப்பெரிய விலை கொடுத்தாவது இந்தியா தனது நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் என்று கூறி, ரஷ்யாவில் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்திய பொருட்கள் மீது 50% வரி விதித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நடவடிக்கைக்குப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆக. 7) பதிலடி கொடுத்தார்.
உள்ளூர் விவசாயிகள் பாதுகாப்பு விவகாரம் இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளில் தொய்வை ஏற்படுத்தியுள்ள நிலையில், எம்.எஸ். சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்பதற்காக இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்க அரசு விதிக்கவுள்ள அதிகப்படியான வரிகளைத் தாங்க மத்திய அரசாங்கம் தயாராக உள்ளது என்றார்.
`எங்களைப் பொறுத்தவரையில் எங்கள் விவசாயிகளின் நலனே எங்களுக்கு முன்னுரிமை’ என்று பிரதமர் கூறினார்.
`விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது. அதற்காக நாம் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பது எனக்குத் தெரியும், நான் அதற்குத் தயாராக இருக்கிறேன். இந்தியா அதற்குத் தயாராக உள்ளது’ என்றார்.
இந்தியப் பொருட்கள் மீது முதலில் கூடுதலாக 25% வரி விதிப்பதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், பின்னர் ஒட்டுமொத்த வரியை 50% ஆக உயர்த்தினார். பிற நாடுகள் மீது அமெரிக்கா விதித்த வரியில் இதுவே அதிகபட்சமாகும்.
ரஷ்யாவிடம் எண்ணெய் மற்றும் ராணுவ உபகரணங்களை வாங்குவதைக் கைவிடும்படி அமெரிக்கா விடுத்த எச்சரிக்கைக்கு செவிசாய்க்க இந்தியா மறுத்ததற்கான நேரடி தண்டனையாக இந்த வரி விதிப்பு நடவடிக்கை கருதப்படுகிறது.
அண்மை ஆண்டுகளில் உச்சகட்டத்தை எட்டிய இரு நாட்டு அரசு ரீதியிலான உறவுகளை சீர்குலைத்த ஒரு முக்கிய புள்ளியாக இந்த வரி விதிப்பு கருதப்படுகிறது.