நீட் தேர்வு முடிவுகளை தேர்வு மையங்கள் வாரியாக வெளியிட வேண்டும்: உச்ச நீதிமன்றம்

இந்த முடிவுகளை நாளை மாலை 5 மணிக்குள் வெளியிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
நீட் தேர்வு முடிவுகளை தேர்வு மையங்கள் வாரியாக வெளியிட வேண்டும்: உச்ச நீதிமன்றம்
1 min read

 நீட் தேர்வு முடிவுகளை நகரங்கள் மற்றும் தேர்வு மையங்கள் வாரியாக வெளியிட தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு குளறுபடி தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட பல்வேறு மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதில் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி தேசிய தேர்வு முகமை தொடர்ந்த வழக்கும் ஒன்று.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு இதை விசாரித்தது. நீட் வினாத் தாள் கசிவு மற்றும் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. வழக்கின் விசாரணை நிலை குறித்த இரண்டாவது அறிக்கையை சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

சிபிஐ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை வெளியிட்டால், அது விசாரணையைப் பாதிக்கும் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. மேலும், வினாத் தாள் கசிவால் ஒட்டுமொத்த தேர்வும் பாதிக்கப்பட்டுள்ளது என்பது உறுதியானால் மட்டுமே நீட் மறுதேர்வுக்கு உத்தரவிட முடியும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீட் மறுதேர்வுக்கு கோரிக்கை மாணவர்களின் எண்ணிக்கை குறித்து தேசிய தேர்வு முகமையிடம் உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியது. இதற்கு மொத்தம் 385 மாணவர்கள் நீட் மறுதேர்வு கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.

நீட் தேர்வில் பெரிதளவில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்ற சென்னை ஐஐடியின் ஆய்வுத் தரவுகளை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. இதற்கு மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நரேந்தர் ஹூடா எதிர்ப்பு தெரிவித்தார்.

சென்னை ஐஐடியின் இயக்குநர்களின் ஒருவர் தேசிய தேர்வு முகமை நிர்வாகக் குழுவில் உறுப்பினராக உள்ளார் என்று வாதாடிய மூத்த வழக்கறிஞர் நரேந்தர் ஹூடா, இந்த ஆய்வானது சரியான முறையில் செய்யவில்லை என்றும் கூறினார்.

இந்த வழக்கு விசாரணை உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடங்கவுள்ளது.

பிற்பகலில் உச்ச நீதிமன்றம் மீண்டும் கூடியது. நீட் தேர்வு முடிவுகளை மாணவர்களின் அடையாளங்களை மறைத்து நகரங்கள் வாரியாகவும், தேர்வு மையங்கள் வாரியாகவும் வெளியிட தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த முடிவுகள் நாளை மாலை 5 மணிக்குள் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மீண்டும் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in