
ஆர்சிபி கொண்டாட்ட நிகழ்ச்சியில் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், முதல்வர் சித்தராமையாவின் அரசியல் செயலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஜூன் 4 அன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்துள்ளார்கள். இச்சம்பவம் தொடர்பாக ஆர்சிபி அணியின் மார்கெடிங் பிரிவு தலைவர் நிகில் சோசாலே, டிஎன்ஏ நிறுவனத்தைச் சேர்ந்த கிரண், சுமந்த் மற்றும் சுனில் மேத்யூ ஆகியோர் கர்நாடக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இதனிடையே பெங்களூரு காவல் ஆணையர் பி. தயானந்தா, காவல் உதவி ஆணையர் சி. பாலகிருஷ்ணா, காவல் துணை ஆணையர் (மத்திய மண்டலம்) ஷேகர், கூடுதல் காவல் ஆணையர் விகாஷ் குமார், கப்பன் பூங்கா காவல் ஆய்வாளர் ஏ.கே. கிரிஷ் ஆகியோரை நீக்கி முதல்வர் சித்தராமையா வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக மேலும் இருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் சித்தராமையாவின் அரசியல் செயலர் கே. கோவிந்தராஜ் நீக்கப்பட்டுள்ளார். உளவுத் துறை தலைவர் ஹேமந்த் நிம்பல்கர் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கோவிந்தராஜ் நீக்கம் குறித்து தகவலறிந்த வட்டாரங்களின் அடிப்படையில் என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, புதன்கிழமை காலை முதல்வர் இல்லத்தில் நடைபெற்ற முக்கியக் கூட்டத்தில் ஆர்சிபியின் வெற்றிக் கொண்டாட்டத்தை மூன்று நிகழ்வுகளாக நடத்த அனுமதிக்க முடியாது என்று காவல் ஆணையர் மறுத்தபோது,
இதை நடத்த வேண்டும் என கோவிந்தராஜ் அழுத்தம் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. திறந்தவெளிப் பேருந்து பேரணிக்கு அனுமதி கொடுக்க முடியாது என காவல் ஆணையர் மறுத்திருக்கிறார். இரு நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்குமாறு காவல் ஆணையரை இவர் வற்புறுத்தியுள்ளார் எனத் தெரிகிறது.
எனினும், அரசு வெளியிட்ட அறிவிப்பில் கோவிந்தராஜ் பணி நீக்கத்துக்கான காரணம் குறித்து எதுவும் இடம்பெறல்லை.