
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மூத்த நிர்வாகி நிகில் சோசாலேவுக்கு இடைக்காலப் பிணை வழங்கி கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை முதன்முறையாக வென்றதைக் கொண்டாடும் விதமாக ஜூன் 4 அன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ரசிகர்கள் அதிகளவில் கூடியதால் கூட்டநெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தார்கள்.
இச்சம்பவம் தொடர்பாக ஆர்சிபியின் மூத்த நிர்வாகி நிகில் சோசாலே உள்பட 4 பேர் ஜூன் 6 அன்று கைது செய்யப்பட்டார்கள். இவர்கள் பிணை கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள்.
இவர்களுடைய மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், பல்வேறு காரணங்களில் இவர்களுடைய கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என்று கூறியது. மேலும், கைது செய்யப்பட்ட நால்வருக்கும் பல்வேறு நிபந்தனைகள் விதித்து இடைக்காலப் பிணை வழங்கி கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவுடன் இரு வாரங்களுக்குள் விசாரணை நீதிமன்றத்தில் தங்களுடைய கடவுச் சீட்டை ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. இவர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.