ஆர்சிபி மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் கைது!

கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க செயலாளர் மற்றும் பொருளாளர் தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்சிபி மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் கைது!
1 min read

ஆர்சிபி அணியின் வெற்றி விழா கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலால் உயிரிழப்புகள் ஏற்பட்ட விவகாரத்தில், அந்த அணியின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் நிகில் சோசாலே உள்பட நால்வரை கர்நாடக மாநில காவல்துறை கைது செய்துள்ளது.

கடந்த ஜூன் 4 அன்று பெங்களூருவில் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின்போது, 11 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மார்க்கெட்டிங் மற்றும் வருவாய் பிரிவு தலைவர் நிகில் சோசாலே பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பைக்கு விமானத்தில் செல்லவிருந்த நிலையில், விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மேலும், பெங்களூரு வெற்றி விழாவுக்கான ஏற்பாடுகளை செய்த டிஎன்ஏ நிறுவனத்தின் ஊழியர்களான கிரண், சுமந்த் மற்றும் சுனில் மாத்யூ ஆகியோரையும் கர்நாடக காவல்துறை கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட இந்த நால்வரும் பெங்களூருவின் கப்பன் பார்க் காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் ஆர்சிபி அணி, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் மற்றும் டிஎன்ஏ நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிலும், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க செயலாளர் மற்றும் பொருளாளரை காவல்துறையினர் கைது செய்யவில்லை. அவர்கள் இருவரும் தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெற்றி பேரணிக்கு பெங்களூரு மாநகர காவல்துறையிடம் அனுமதி பெறாமலேயே எக்ஸ் கணக்கில் ஆர்சிபி அறிவித்ததாகவும், அதற்குப் பிறகு காவல்துறையை அணுகியபோது அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. 

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in