
கடந்த ஜூன் 4 அன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற வெற்றி அணிவகுப்பிற்கு, மாநகர காவல்துறையின் ஆலோசனை மற்றும் அனுமதி இல்லாமல் பொதுமக்களுக்கு தன்னிச்சையான முறையில் ஆர்சிபி அணி நிர்வாகம் அழைப்பு விடுத்ததாக, 11 பேர் உயிரிழந்த கூட்ட நெரிசல் விவகாரம் குறித்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அம்மாநில அரசு தாக்கல் செய்த அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் இந்த அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அறிக்கையை ரகசியமாக வைத்திருக்குமாறு மாநில அரசு நீதிமன்றத்திடம் வலியுறுத்தியது, ஆனால் அத்தகைய ரகசியத்தன்மைக்கு எந்தவித சட்டப்பூர்வ காரணமும் இல்லை என்று நீதிமன்றம் கூறியதை அடுத்து அறிக்கை வெளியாகியுள்ளது.
ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்ற ஜூன் 3-ம் தேதி, ஆர்சிபி நிர்வாகம் தரப்பில் இருந்து பெங்களூரு காவல்துறையைத் தொடர்புகொண்டு, வெற்றி அணிவகுப்பு நடத்துவது குறித்து தகவல் தெரிவித்ததாக கர்நாடக அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, `இது சட்டப்படி தேவைப்படும் அனுமதி கோரல் நடைமுறை அல்ல, அதில் ஒரு அறிவிப்பின் தன்மையில் இருந்தது’ என்று அறிக்கை கூறுகிறது. `இத்தகைய நிகழ்வுகளுக்கு குறைந்தபட்சம் ஏழு நாட்களுக்கு முன்னரே உரிய அனுமதிகளை பெறவேண்டும்’ என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், `பேரணியின்போது தோராயமாக கூடும் மக்களின் எண்ணிக்கை, அதற்காக மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடுகள், சாத்தியமுள்ள இடையூறுகள் போன்ற தகவல்கள் இல்லாததால், பெங்களூரு கப்பன் பார்க் காவல் நிலையத்தில் 03.06.2025 அன்று மாலை 6.30 மணியளவில் கர்நாடக கிரிக்கெட் சங்கம் தரப்பில் முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கவில்லை’ என்றும் அறிக்கை கூறப்பட்டுள்ளது.
காவல்துறையிடம் கலந்தாலோசிக்காமல், மறுநாள் (ஜூன் 4) காலை 7.01 மணிக்கு ஆர்சிபியின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டதாகவும், அதில் `பொதுமக்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள், விதான சௌதாவில் தொடங்கி சின்னசாமி வைதானத்தில் நிறைவடையும் வெற்றி அணிவகுப்பில் பங்கேற்க அழைப்பதாக’ கூறப்பட்டிருந்தாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
`இந்த தகவலை மீண்டும் வலியுறுத்தி காலை 8 மணிக்கு மற்றொரு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. காலை 8:55 மணிக்கு ஆர்சிபி அணியின் முக்கிய வீரரான விராட் கோலியின் காணொளி ஒன்றை ஆர்சிபியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில், ஆர்சிபியின் வெற்றியை பெங்களூரு நகர மக்கள் மற்றும் ஆர்சிபி ரசிகர்களுடன் 04.06.2025 அன்று பெங்களூருவில் கொண்டாட விரும்புவதாக அவர் கூறியுள்ளார்’ என்று அறிக்கை கூறுகிறது.