
ஐபிஎல் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்றதைக் கொண்டாடுவதற்காக பெங்களூருவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வின்போது, கூட்ட நெரிசலால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து கர்நாடக உயர் நீதிமன்றம், மாநில அரசுக்கு நோட்டீஸ் வழங்கி அறிக்கை கோரியுள்ளது.
ஐபிஎல் இறுதிச் சுற்றில் வெற்றிபெற்ற ஆர்சிபி அணி வீரர்களுக்கான பாராட்டு விழாவை, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று (ஜூன் 4) ஏற்பாடு செய்திருந்தது. இந்த விழாவில் கலந்துகொள்ள ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானம் அமைந்துள்ள பகுதியில் திரண்டனர்.
இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, 11 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கர்நாடக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இன்று (ஜூன் 5) பிற்பகல் 2 மணிக்கு மேல், பொறுப்பு தலைமை நீதிபதி வி கமலேஷ்வர் ராவ் மற்றும் சி.எம். ஜோஷி அமர்வு இது தொடர்பாக விசாரணையை மேற்கொண்டது.
கர்நாடக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், சம்பவ இடத்தில் போதுமான அளவு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததாகவும், ஆனால் எதிர்பார்த்ததைவிட கூட்டம் அதிகமாக இருந்ததாகவும், நீதிமன்றத்தில் விளக்கமளித்தார்.
`பெங்களூருவில் இருந்து மட்டுமல்லாமல், மாநிலம் முழுவதிலும் இருந்தும் வெளியூர்களிலிருந்தும்கூட மக்கள் கூட்டம் அதிகமாக வந்திருந்தது. (மைதானத்திற்குள்) நுழைவு இலவசம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டதால் 2.5 லட்சம் பேர் வந்தனர்’ என்று தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறினார்.
மேலும், உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கான நிவாரணத் தொகையை முதல்வர் அறிவித்துள்ளதாகவும், காயமடைந்தவர்களுக்கான முழு சிகிச்சை தொகையை அரசு ஏற்றுக்கொள்ளும் எனவும் அரசு வழக்கறிஞர் விளக்கமளித்தார்.
இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யவும், அதில் கூட்ட நெரிசல் குறித்த காரணங்களைக் குறிப்பிடவும், வருங்காலத்தில் இது போன்ற சம்பவங்களை தவிர்ப்பதற்கான ஆலோசனைகளைக் கூறுமாறும் அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூன் 10-க்கு ஒத்திவைத்தனர்.
இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து 7 நாள்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய பெங்களூரு காவல் ஆணையர் மற்றும் ஆட்சியருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.