தீபாவளி காரணமாக ரிசர்வ் வங்கி தேர்வு தேதிகளை மாற்ற வேண்டும்: சு. வெங்கடேசன் மீண்டும் வலியுறுத்தல் | Su Venkatesan |

"தீபாவளிகள் எதிர்காலத்தில் வரலாம். ஆனால், சிலருக்கு வயது போய்விடும். சிலருக்கு வாய்ப்புகள் போய்விடும்."
சு. வெங்கடேசன் - கோப்புப்படம்
கோப்புப்படம்https://x.com/SuVe4Madurai
1 min read

தீபாவளி பண்டிகை அக்டோபர் 20 அன்று கொண்டாடப்படவுள்ளதால் அக்டோபர் 18, 19 அன்று நடைபெறவுள்ள ரிசர்வ் வங்கி தேர்வு தேதிகளை மாற்ற வேண்டும் என மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

"ரிசர்வ் வங்கியின் கிரேட் 'பி' (DR) அதிகாரிகள் தேர்வு அக்டோபர் 18, 19 ஆகிய நாள்களில் சென்னையில் நடைபெறவுள்ளது. அக்டோபர் 20 தீபாவளி என்பதால் தேர்வர்கள் சென்னை வந்துபோவது சிரமமாக இருக்கும். ஆகவே, பொருத்தமான பிந்தைய தேதிகளுக்குத் தேர்வுகளை மாற்ற வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு 15.09.2025 அன்று கடிதம் எழுதி இருந்தேன்.

அதற்கு 30.09.2025 அன்று தேதியிட்ட கடிதம் மூலம் பதில் அளித்துள்ள ரிசர்வ் வங்கியின் அதிகாரி, தேர்வு தேதிகள் பல்வேறு காரணிகளை முன்னிட்டு முடிவு செய்திருப்பதால் தேர்வு தேதிகளை மாற்றுவது இயலாதது எனத் தெரிவித்துள்ளார். அதில் ஒரு காரணியாக, தேர்வு மையங்கள் குறிப்பிட்ட தேதிகளில் கிடைப்பதைச் சுட்டிக்காட்டி உள்ளார்.

தீபாவளியானது கோடிக்கணக்கான மக்களால் கொண்டாடப்படுகிற திருவிழா என்பதும், அதனை ஒட்டிய நாள்களில் சென்னைக்கு வந்துபோவது எவ்வளவு இன்னல்களைத் தரும் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான காரணியாகும். தீபாவளி காலத்தில் தேர்வு மையங்கள் எல்லாம் எளிதாகக் கிடைக்கும் என்பது எல்லோரும் அறிந்ததே. அதையே தேர்வு தேதி நிர்ணயம் செய்யப்படுவதற்கான காரணியாகக் கூறுவது வினோதமான வாதம்.

ஆகவே, தேர்வர்கள் ஆழ்ந்த கவனத்துடனும் நிம்மதியான மன நிலையோடும் தேர்வுகளை எழுதுகிற வகையில் தேர்வு தேதிகளை மாற்றி அமைக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி ரிசர்வ் வங்கியின் ஆளுநருக்குக் கடிதம் எழுதி உள்ளேன்.

எதிர்காலத்தில் எனது கருத்தைக் கவனத்தில் கொள்வதாகக் குறிப்பிடப்பட்டிருப்பதற்கு நன்றி. தீபாவளிகள் எதிர்காலத்தில் வரலாம். ஆனால், சிலருக்கு வயது போய்விடும். சிலருக்கு வாய்ப்புகள் போய்விடும். அதனை எதிர்காலம் ஈடு செய்ய இயலாது. ஆகவே, ரிசர்வ் வங்கி ஆளுநர் உடனடியாகத் தலையிட்டு இப்போதே தீர்வு வழங்கிட வேண்டும்" என்று சு. வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.

Su Venkatesan | RBI Exam |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in