
இந்தியாவின் பிரபல தொழிலதிபரும் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் கடந்த அக்.9 அன்று காலமானார்.
ரத்தன் டாடா மறைவைத் தொடர்ந்து, டாடா அறக்கட்டளைக்குப் புதிய தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டார்.
டாடா நிறுவனத்தின் மாபெரும் வளர்ச்சியில் ரத்தன் டாடாவுக்கு முக்கிய பங்கு உள்ளது. கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து மறைந்த அவர், மக்களுக்காக ஏராளமான பொதுசேவைகளை செய்துள்ளார்.
இந்நிலையில், ரத்தன் டாடாவின் சொத்து இனி யாருக்குக் கிடைக்கும் என்கிற பலருடைய கேள்விக்குப் பிரபல அரசியல் விமர்சகரும் கிழக்கு பதிப்பகத்தின் உரிமையாளருமான பத்ரி சேஷாத்ரி, கிழக்கு நியூஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
“ரத்தன் டாடாவுக்கு குடும்பம் இல்லாத காரணத்தால், பெரும் பணம் அவருடைய பங்குக்கு கிடைக்கும். அவரின் தனிப்பட்ட முதலீடுகளும் அதிகளவில் பெருகியிருக்கும், அதனை அவர் செலவு செய்தார். அணிவதற்கு ஆடை, தங்குவதற்கு ஒரு வீடு, இதற்கு மேல் என்ன செலவு இருக்கப்போகிறது?
எனவே, தனது தேவையையும் கடந்து இவ்வளவு செல்வத்தையும் ஈட்டுவது, அள்ளி கொடுப்பதற்காகத்தான். அனைத்து சொத்தையும் அவர் டாடா அறக்கட்டளைக்கு தான் எழுதி வைத்திருப்பார். அவரின் சொத்து விவரம் குறித்து நமக்கு தெரியாது, ஆனால் அனைத்தும் மக்களுக்கே போய் சேரும்”.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.