
தனது இரு சீடர்களை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக சிறை தண்டனையை அனுபவித்து வரும் தேரா சச்சா சவுதா என்ற ஆன்மீக அமைப்பின் தலைவரான குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு 40 நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
தன்னைத்தானே கடவுள் என்று கூறிக்கொள்ளும் அவருக்கு கடந்த எட்டு ஆண்டுகளில் வழங்கப்பட்ட 14-வது பரோல் இதுவாகும். குறிப்பாக, நடப்பாண்டில் 3-வது முறையாகப் பரோல் வழங்கப்பட்டுள்ளது.
முந்தைய பரோலுக்குப் பிறகு வெறும் மூன்று மாதங்கள் கழித்து தற்போது புதிய பரோலைப் பெற்றதும், இன்று (ஆக. 5) அதிகாலை ஹரியாணாவின் ரோஹ்தக்கில் உள்ள சுனாரியா சிறையில் இருந்து ராம் ரஹீம் வெளியேறினார். 57 வயதான அவர் செப்டம்பர் 14-ம் தேதி சிறைக்குத் திரும்பும் வரை சிர்சாவை தலைமையிடமாகக் கொண்ட தேராவில் தங்குகிறார்.
கடந்த 2017-ல் தன்னுடைய இரு சீடர்களை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், அதைத் தொடர்ந்து 2019-ல் ராம் சந்தர் சத்ரபதி என்ற பத்திரிகையாளரைக் கொலை செய்ததற்காக ஆயுள் சிறை தண்டனையும் பெற்றுள்ள ராம் ரஹீம் அடிக்கடி பரோலில் வெளியே செல்லும் நிகழ்வு பல்வேறு தரப்பினரிடமிருந்து தொடர்ந்து விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
கடைசியாக கடந்த ஏப்ரல் 9-ம் தேதி அவருக்கு 21 நாள் பரோல் வழங்கப்பட்டது, அதற்கு முன்பு, பிப்ரவரி 5-ம் தேதி தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சற்று முன்னதாக, அதாவது ஜனவரி மாதத்தில் 30 நாள் பரோல் பெற்றார்.
கடந்தாண்டு அக்டோபர் 5-ம் தேதி ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு, அக்டோபர் 1-ல் அவருக்கு 20 நாள் பரோல் வழங்கப்பட்டது.
ராம் ரஹீம் தலைமையிலான தேரா சச்சா சவுதா ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் பல மாநிலங்களில் பெரும் எண்ணிக்கையிலான ஆதரவாளர்களைக் கொண்டுள்ளது. ஹரியானாவில் சிர்சா, ஃபதேஹாபாத், குருக்சேஷ்த்ரா, கைத்தால் மற்றும் ஹிசார் போன்ற மாவட்டங்களில் இந்த பிரிவு வலுவான இருப்பைக் கொண்டுள்ளது.