ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் 5 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவிலுள்ள ராமேஸ்வரம் கஃபேவில் மார்ச் 1-ல் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரித்து வரும் நிலையில் இது தொடர்பாக தமிழ்நாட்டில் 5 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய இருவர் சென்னையில் சில நாட்கள் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மண்ணடி விநாயகர் கோவில் தெரு, மண்ணடி மூட்டைக்காரன் தெரு, திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு விடுதி, ராமநாதபுரம் உட்பட தமிழ்நாட்டில் 5 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகத் தெரிகிறது.
மேலும் சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் தங்கியிருந்த இடம், அவர்கள் யாரையெல்லாம் சந்தித்தார்கள் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.