ரயில்களின் பாதுகாப்புக்கு பாதிப்பதும், ரயில் பயணிகளுக்கு சிரமமும் ஏற்படுத்தும் வகையில் ரீல்ஸ் எடுக்கும் நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய, மத்திய ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
தனிப்பட்ட வாழ்க்கையிலும் சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகரித்துள்ள இந்த காலகட்டத்தில் பொது இடங்களில் ரீல்ஸ் எடுப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்ல பொதுமக்கள் பலர் தயங்காத நிலை உருவாகியுள்ளது. இதன் வெளிப்பாடாக, ஓடும் ரயில்களிலும், ரயில் தண்டவாளங்களிலும் ரீல்ஸ் எடுப்பது வாடிக்கையாகியுள்ளது.
இத்தகைய நபர்களால் ரயில்களின் பாதுகாப்புக்கு பாதிப்பும், அதில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு கடும் சிரமமும் ஏற்படுவதாக புகார் எழுப்பப்பட்டு வருகிறது. அதிலும், ரீல்ஸ் அல்லது செல்ஃபி எடுக்கும்போது ரயில்கள் மோதி சம்மந்தப்பட்ட நபர்கள் இறந்துபோகும் வகையிலான காணொளிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகின.
இந்நிலையில், விதிகளை மீறி ரயில் நிலையங்களிலும், ஓடும் ரயில்களிலும், ரயில் தண்டவாளங்களிலும் ரீல்ஸ் எடுப்போர் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும், ரயில்வே பாதுகாப்புப் படைக்கும், மத்திய ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
சமீபத்தில் ஜெய்ப்பூர் மண்டலத்தைச் சேர்ந்த கனக்புரா மற்றும் தனக்யா ரயில் நிலையங்களுக்கு நடுவே இருந்த ரயில் தண்டவாளப் பாதையில் மஹேந்திரா எஸ்.யூ.வி. கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அதே நேரத்தில் அந்த ரயில்பாதையில் வந்துகொண்டிருந்த சரக்கு ரயில் ஓட்டுனர், தண்டவாளத்தில் காரைப் பார்த்ததும் ரயிலை நிறுத்தி விபத்தைத் தவிர்த்தார்.
சமூக வலைதளப் பதிவிற்காக இத்தகைய செயலில் அந்தக் காரின் உரிமையாளர் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகித்து, அவர் மீது ரயில்வே பாதுகாப்புப் படை வழக்குப்பதிவு செய்தது. இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.