நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை!
போலியாக வரி விலக்குகளை பெற்றதாக குற்றம்சாட்டப்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களைக் குறிவைத்து நாடு முழுவதும் மிகப்பெரிய அளவிலான சோதனை நடவடிக்கையை வருமான வரித்துறை இன்று (ஜூலை 14) தொடங்கியுள்ளது.
அரசியல் நன்கொடைகள், கல்விக் கட்டணம், மருத்துவச் செலவுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் போலியாக வரி விலக்குகளைப் பெற, வரி செலுத்துவோருக்கு உதவியதாகக் கூறப்படும் நபர்களுடன் தொடர்புடைய 200-க்கும் மேற்பட்ட இடங்களில் நாடு தழுவிய அளவில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போலியான வகையில் வரி விலக்குகள் கோரி வருமான வரி தாக்கல் செய்ய உதவி வரும் சில தனியார் அமைப்புகள் மற்றும் இடைத்தரகர்களால் மேற்கொள்ளப்பட்ட மோசடிகள் அண்மையில் விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டன.
குறிப்பாக, வரி செலுத்துவோருக்கு நன்மை அளிக்கும் சில விதிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு மோசடி நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதிகப்படியான பணத்தைத் திரும்பப் பெறுவதற்காக சிலர் போலியான முறையில் வருமான வரி பிடித்தம் (டிடிஎஸ்) படிவங்களை சமர்ப்பித்துள்ளனர்.
வரி செலுத்துவோர் தங்களுக்கான வரி பொறுப்பை செயற்கையாகக் குறைக்க உதவுவதற்காக, பல இடைத்தரகர்கள் போலியான வகையிலான நன்கொடை ஆவணங்களை ஏற்பாடு செய்துள்ளனர். சில சமயங்களில் பதிவு செய்யப்படாத அல்லது சந்தேகத்திற்குரிய நிறுவனங்கள் மூலம் இத்தகைய நன்கொடைகள் அனுப்பியதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நன்கொடைகளை, வரி விதிக்கக்கூடிய வருமானத்திலிருந்து கழிக்க அனுமதிக்கும் பிரிவு 80GGC-ன் கீழ் கோரப்பட்ட விலக்குகள் மீது இந்த சோதனையில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளுக்கான நன்கொடைகளைத் தவிர, கல்விக் கட்டணம், மருத்துவ செலவுகள் மற்றும் பிற விலக்குகள் ஆகியவற்றின் கீழ் மோசடியான முறையில் வரி விலக்கு கோரிக்கைகளை முன்வைக்க உதவிய வலைப்பின்னல்களை இந்த நாடு தழுவிய சோதனை குறிவைத்துள்ளது.