
மேகாலயாவில் ராகுல் காந்தி தன்னுடைய பாத யாத்திரையை மீண்டும் துவக்கியிருக்கிறார். முன்னதாக இன்று காலை அஸ்ஸாமில் உள்ள ஸ்ரீ சங்கர் தேவ் சத்ரா கோயிலுக்குச் செல்ல ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து பாத யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் மாலையில் பாத யாத்திரை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
இன்று அஸ்ஸாமில் உள்ள ஸ்ரீ சங்கர் தேவ் சத்ரா கோயிலுக்கு ராகுல் காந்தியும் அவரது ஆதரவாளர்களும் செல்ல முற்பட்டபோது, ஏற்கனவே அங்குச் சில நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்த காவல்துறை அதிகாரிகள் அனுமதிக்க மறுத்துவிட்டார்கள். அயோத்தி கோயில் திறப்பு விழா நடந்தேறுவதால் சமூக விரோதிகள் ஊடுருவ வாய்ப்பிருப்பதால் பாத யாத்திரையை நிறுத்தி வைக்குமாறு மாவட்டக் காவல்துறை ஆணையர் கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் ராகுல் காந்தியின் பாத யாத்திரையைத் தடை செய்ய அஸ்ஸாம் அரசு முயற்சி செய்வதாக காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்கள். மகாத்மா காந்தி காட்டிய அகிம்சை வழியைத்தான் காங்கிரஸ் பின்பற்றுகிறது. எந்நாளும் வன்முறையைக் கையில் எடுப்பதில்லை. ஆகவே, ராகுல் காந்தியின் பாத யாத்திரையைத் தடை செய்யாமல் அனுமதிக்க வேண்டும் என்று தில்லியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியினரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேகாலயாவில் இன்று மாலை தன்னுடைய பாத யாத்திரையை மீண்டும் ஆரம்பித்த ராகுல் காந்தி, மேகாலயாவின் வளர்ச்சி குறித்து தில்லிக்குத் தொலைநோக்குப் பார்வை இல்லையென்று குறிப்பிட்டார். நாட்டிலேயே ஊழல் நிறைந்த அரசு, மேகாலய மாநில அரசுதான் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருந்ததைச் சுட்டிக்காட்டி பேசிய ராகுல் காந்தி, ஊழல் அரசு என்று தெரிந்த பின்னரும் பாஜகவினர் ஏன் கூட்டணி சேர்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினார்.
ராகுல் காந்தியின் பாதயாத்திரையானது 67 நாள்கள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்தியாவின் கிழக்கு மேற்காக உள்ள 110 மாவட்டங்களின் வழியாகப் பயணித்து இறுதியாக மார்ச் மாதம் மும்பையில் நிறைவடையவுள்ளது.