
உயர்கல்வி அமைப்பிலுள்ள குறைபாடுகளை இளைநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு அம்பலப்படுத்தியுள்ளதாக தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளதாவது:
"பொது மருத்துவக் கல்வியைக் கட்டமைப்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. இதன் விளைவு, தமிழ்நாட்டில் பொது சுகாதார கட்டமைப்பு வலுவாக உள்ளது. இதை வலுவிழக்கச் செய்வதற்கான எந்தவொரு முயற்சியும் கண்டனத்துக்குரியது.
மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமையின் பெரும் தோல்வியால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மாணவர்களை நான் கடந்த மாதம் சந்தித்தேன். 24 லட்ச மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.
தனியார் பயிற்சி மையங்களுக்குச் செல்ல போதிய வசதிகள் இல்லாததால், திறமைமிக்க கிராமப்புற மாணவர்களால் சமநிலையிலிருந்து போட்டியிட முடியாத சூழல் ஏற்படுகிறது.
நாட்டின் உயர்கல்வி அமைப்பிலுள்ள குறைபாடுகளை இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு அம்பலப்படுத்தியுள்ளது. தேசியமயமாக்கப்பட்ட தேர்வு முறையால் விளிம்புநிலை மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மீதான கவனத்தையும் இது ஈர்த்துள்ளது.
இந்தப் பிரச்னைகள் குறித்தும், தமிழ்நாட்டின் கோரிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும். இளைஞர்கள் மீதான நலனில் அக்கறை கொண்டு, இண்டியா கூட்டணி ஆட்சியிலுள்ள மாநில சட்டப்பேரவைகளிலும் இதுபோன்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார் ராகுல் காந்தி.
முன்னதாக, நீட் தேர்வை ரத்து செய்ய மாநில சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றுவது தொடர்பாக தில்லி, ஹிமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகம், கேரளம், பஞ்சாப், தெலங்கானா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் முதல்வர்களுக்கும் தமிழ்நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். ராகுல் காந்திக்கும் முதல்வர் கடிதம் எழுதியிருந்தார்.