வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறாரா ராகுல்?: கேரள காங்கிரஸ் தலைவர் தகவல்

"எனக்கு வயநாடு எம்.பி.யாக தொடரவா அல்லது ராய் பரேலி எம்.பி.யாக தொடரவா என்ற குழப்பம் இருக்கிறது. துரதிருஷ்டவசமாக, பிரதமரைப்போல நான் கடவுளால் வழிநடத்தப்படவில்லை." - ராகுல்
கோப்புப்படம்
கோப்புப்படம்
1 min read

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக கேரள காங்கிரஸ் தலைவர் கே. சுதாகரன் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப் பிரதேச மாநிலம் ராய் பரேலியில் போட்டியிட்டு இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார் ராகுல் காந்தி. இந்த வெற்றியைத் தொடர்ந்து, இரு தொகுதிகளிலும் நன்றி தெரிவிப்பதற்காக சிறப்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ராய் பரேலியில் நேற்று கூட்டம் நடைபெற்ற நிலையில், இன்று வயநாட்டில் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

மலப்புரத்தில் பேசிய ராகுல் காந்தி, "எனக்கு வயநாடு எம்.பி.யாக தொடரவா அல்லது ராய் பரேலி எம்.பி.யாக தொடரவா என்ற குழப்பம் இருக்கிறது. துரதிருஷ்டவசமாக, பிரதமரைப்போல நான் கடவுளால் வழிநடத்தப்படவில்லை. நான் ஒரு மனிதன்" என்றார்.

கேரள காங்கிரஸ் தலைவர் கே. சுதாகரன் கூறுகையில், "ராகுல் காந்தி நாட்டை வழிநடத்த வேண்டும் என்பதால், அவர் வயநாட்டிலேய இருந்துவிட வேண்டும் என நாம் எதிர்பார்க்கக் கூடாது. அனைவரும் இதைப் புரிந்துகொண்டு, வாழ்த்துகளைத் தெரிவித்து, ஆதரவளிக்க வேண்டும்" என்றார்.

இதன்மூலம், ராகுல் காந்தி வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்யவுள்ளது ஏறத்தாழ உறுதியானது. ராய் பரேலி காங்கிரஸ் இயக்கத்தில் பாரம்பரிய தொகுதி என்பதால் அங்கு ராஜினாமா செய்வதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒரு வேட்பாளர் ஒரே நேரத்தில் இரு தொகுதிகளில் போட்டியிடலாம். ஆனால், இரு இடங்களிலும் வெற்றி பெற்றால் ஏதேனும் ஒரு எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஒரே நேரத்தில் இரு எம்.பி. பதவிகளை வகிக்க மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் இடமில்லை.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in