
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது எல்லை தாண்டி பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் மேற்கொண்ட தாக்குதலில், ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பெற்றோரையோ அல்லது குடும்பத்திற்கான வருமானத்தை ஈட்டித் தந்த நபர்களையோ இழந்த 22 குழந்தைகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தத்தெடுக்கவுள்ளார்.
பாகிஸ்தான் தாக்குதலுக்குப் பிறகு ஆதரவற்றவர்களாக இருந்த இந்தக் குழந்தைகளின் கல்விக்கான முழு நிதியுதவியை ராகுல் காந்தி அளிப்பார், அவர்கள் பட்டப்படிப்பை முடிக்கும் வரை (இத்தகைய) ஆதரவு தொடரும் என்று ஜம்மு-காஷ்மீர் யூனிய பிரதேச காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா தெரிவித்ததாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது
மேலும், மாணவர்கள் தங்களின் பள்ளிப்படிப்பை இடையூறு இல்லாமல் தொடருவதை உறுதி செய்வதற்காக, நிதியுதவியின் முதல் தவணை இந்த வாரம் வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 22-ல் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. இதன் வெளிப்பாடாக மே 7 முதல் 10 வரையில் இரு நாட்டுப் படையினரும் பரஸ்பரம் வான்வழித் தாக்குதல்களை நடத்தினார்கள். அதன்பிறகு மோதல் முடிவுக்கு வந்தது.
இதைத் தொடர்ந்து, மே 24 அன்று ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதிக்குப் பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பட்டியலைத் தொகுக்க உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களிடம் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அரசாங்க பதிவுகளை சரிபார்த்த பிறகு குழந்தைகளின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டன. தற்போது நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான பூஞ்சில், குழந்தைகள் உள்பட பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் உயிரிழந்த உர்பா பாத்திமா மற்றும் ஸயின் அலி ஆகியோரது சக வகுப்பினருடன் கிறிஸ்ட் பப்ளிக் பள்ளியில் ராகுல் காந்தி பேசியதாவது,
`உங்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நீங்கள் உங்கள் சிறிய நண்பர்களை இழந்திருக்கிறீர்கள். அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். இப்போது, நீங்கள் கொஞ்சம் ஆபத்திலும் கொஞ்சம் பயத்திலும் இருக்கிறீர்கள், ஆனால் கவலைப்படவேண்டாம்; இயல்பு நிலை திரும்பும்’ என்றார்.