மோடி அமைச்சரவையில் வாரிசுகளுக்கு வாய்ப்பு: பட்டியலை வெளியிட்ட ராகுல்!

"சொல்லுக்கும் செயலுக்கும் இடையிலான வித்தியாசத்தின் பெயர்தான் நரேந்திர மோடி." - ராகுல் காந்தி விமர்சனம்
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் 20 அமைச்சர்கள் வாரிசு எனக் குறிப்பிட்டு அவர்களுடைய விவரங்களை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஜூன் 9 அன்று பதவியேற்றது. இவர்களுக்கான துறைகள் நேற்று ஒதுக்கப்பட்டன.

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள வாரிசுகள் என ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார். இவருடையத் தரவுகளின்படி, மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்களில் 20 பேர் ஏற்கெனவே அரசியல் பின்புலம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளார்கள்.

இதுபற்றி எக்ஸ் தளப் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளதாவது:

"தலைமுறை தலைமுறைகளாகச் செய்து வந்த போராட்டம், சேவை மற்றும் தியாகத்தை வாரிசு என்று அழைப்பவர்கள்தான், அரசாங்க குடும்பத்தினரிடம் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கிறார்கள். சொல்லுக்கும் செயலுக்கும் இடையிலான வித்தியாசத்தின் பெயர்தான் நரேந்திர மோடி" என்று குறிப்பிட்டுள்ளார்.

வாரிசு அரசியல் என ராகுல் காந்தி வெளியிட்டுள்ள அமைச்சரவைப் பட்டியல்:

 1. ஹெச்.டி. குமாரசாமி - முன்னாள் பிரதமர் தேவெகௌடாவின் மகன்

 2. ஜோதிராதித்ய சிந்தியா - முன்னாள் மத்திய அமைச்சர் மாதவ் ராவ் சிந்தியாவின் மகன்

 3. கிரெண் ரிஜிஜூ - அருணாச்சலப் பிரதேசத்தின் முதல் இடைக்கால சட்டப்பேரவைத் தலைவர் ரின்சின் காருவின் மகன்

 4. ரக்‌ஷா காட்சே - மகாராஷ்டிர எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான ஏக்நாத் காட்சவின் மருமகள்

 5. ஜெயந்த் சௌதரி - முன்னாள் பிரதமர் சௌதரி சரண் சிங்கின் பேரன்

 6. சிராக் பாஸ்வான் - முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் மகன்

 7. ஜெ.பி. நட்டா - முன்னாள் எம்.பி. மற்றும் மத்தியப் பிரதேச அமைச்சருமான ஜெயஸ்ரீ பானர்ஜியின் மருமகன்

 8. கம்லேஷ் பாஸ்வான் - உத்தரப் பிரதேசத்தில் மக்களவை வேட்பாளர் ஓம் பிரகாஷ் பாஸ்வானின் மகன்

 9. ராம் நாத் தாக்குர் - பிஹார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்குரின் மகன்

 10. ராம் மோகன் நாயுடு - முன்னாள் மத்திய அமைச்சர் யெர்ரன் நாயுடுவின் மகன்

 11. ஜிதின் பிரசாத் - உத்தரப் பிரதேச முன்னாள் எம்.பி. ஜிதேந்திர பிரசாத் மகன்

 12. ஷாந்தனு தாக்குர் - மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் மஞ்சுல் கிருஷ்ணா தாக்குர் மகன்

 13. ராவ் இந்திரஜித் சிங் - ஹரியாணா முன்னாள் முதல்வர் ராவ் பிரேந்திர சிங் மகன்

 14. பியூஷ் கோயல் - முன்னாள் மத்திய அமைச்சர் வேத் பிரகாஷ் கோயலின் மகன்

 15. கீர்த்தி வர்தன் சிங் - உத்தரப் பிரதேச முன்னாள் அமைச்சர் மஹாராஷ் ஆனந்த் சிங்கின் மகன்

 16. வீரேந்திர குமார் காடிக் - மத்தியப் பிரதேச முன்னாள் அமைச்சர் கௌரிஷங்கர் ஷேஜ்வாரின் மைத்துனர்

 17. ரவ்நீத் சிங் பிட்டு - பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த் சிங் பேரன்

 18. தர்மேந்திர பிரதான் - முன்னாள் மத்திய அமைச்சர் தேவேந்திர பிரதானின் மகன்

 19. அனுப்பிரியா படேல் - பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் அப்னா தளம் நிறுவனர் சோனெலால் படேலின் மகள்

 20. அன்னபூர்ணா தேவி - பிஹார் முன்னாள் எம்எல்ஏ ரமேஷ் பிரசாத் யாதவின் மனைவி

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in