வாக்குகளுக்காக பிரதமர் மோடி நடனமும் ஆடுவார்: ராகுல் காந்தி விமர்சனம் | Rahul Gandhi | Bihar Election |

பிஹாரில் இளைஞர்களை ரீல்ஸ் மோகத்தில் வைத்திருப்பதற்காகவே இணையதள சேவையை குறைந்த விலையில் தருகிறார்கள்...
பிஹார் மாநிலம் முசாபர்பூரில் ராகுல் காந்தி பிரசாரம்
பிஹார் மாநிலம் முசாபர்பூரில் ராகுல் காந்தி பிரசாரம்ANI
2 min read

பிரதமர் மோடியிடம் நீங்கள் ஆடினால்தான் வாக்களிப்போம் என்று கூறிப் பாருங்கள் அவர் நடனமும் ஆடுவார் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

பிஹார் மாநில சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6 அன்றும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு நவம்பர் 11 அன்றும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் தலைமையிலான இண்டியா (மகாகட்பந்தன்) கூட்டணி, தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஆகியவை பிரதானமாகக் களத்தில் உள்ளன.

இதற்கிடையில் பிஹாரில் இண்டியா கூட்டணி சார்பில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி தனது தேர்தல் பரப்புரையை இன்று தொடங்கினார். முதற்கட்டமாக முசாபர்பூரில் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற அவர் பேசியதாவது:-

”பிஹாரில் மக்களின் ஆரவாரம் அதிகமாக இருக்கிறது. இது ஆட்சியை மாற்றுவதற்கான நேரம். சத் பூஜையின்போது மோடி நடத்திய நாடகத்தை நீங்கள் தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். நதி அசுத்தமாக இருப்பதால் அவர் நீராட மட்டும் குழாய் தண்ணீர் மூலம் செயற்கை நீர்நிலை உருவாக்கப்பட்டது. இது தொடர்பான உண்மை வெளியானதும் அவர் தடுமாறினார். இதுபோன்ற எத்தகைய நாடகத்தையும் அரங்கேற்ற மோடி தயாராக இருக்கிறார். அவர் பிரசாரத்திற்கு வரும்போது அவரிடம் நீங்கள் ஆடினால்தான் வாக்களிப்போம் என்று சொல்லிப் பாருங்கள், வாக்குக்காக அவர் பரத நாட்டியமே ஆடிவிடுவார்.

பிஹாரின் ஆட்சி நிதீஷ்குமாரால் நடத்தப்படுகிறது என்ற மாயையில் இருந்து வெளியே வருமாறு இந்த மாநில மக்களையும், குறிப்பாக மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால் இந்த அரசு ரிமோட் கன்ட்ரோல் மூலம் பாஜகவால் நடத்தப்படுகிறது. பாஜகவுக்கு பிஹார் மீது அக்கறையே கிடையாது.

பிரதமரின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் ஜிஎஸ்டியும் சிறு குறு வணிகங்களை அழித்துவிட்டது. பிஹாரில் உருவாகியிருக்கும் மகாகட்பந்தன் கூட்டணி அந்த சிறு குறு தொழில்களை மீண்டும் செழிப்பாக்க நினைக்கிறது. அதன்மூலம் உலகில் ‘மேட் இன் சீனா’ லேபிள்கள் எல்லாம் ‘மேட் இன் பிஹார்’ என்று மாற்றப்படும்.

ஏழைகளுக்கு மிகக் குறைந்த விலையில் இணைய வசதி கிடைக்க மோடி ஏற்பாடு செய்கிறாரே அது ஏன் தெரியுமா? அப்போதுதான் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகத்தில் இளைய தலைமுறையைத் தக்க வைத்து, அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்காமல் ஏமாற்ற முடியும் என்பதற்காகத்தான். வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் என்பது தேர்தல் திருட்டு. இண்டியா கூட்டணி ஆட்சியமைத்தால், சாதி மற்றும் மத எல்லைகளைத் தாண்டி சமூகத்தின் அனைத்து பிரிவினரின் நலன்களும் கவனத்தில் கொள்ளப்படுவதை உறுதி செய்யும்” என்று பேசினார்.

Summary

In Bihar, Rahul Gandhi remarked that if the people were to tell Prime Minister Modi, "We will vote for you if you dance," he would be willing to perform Bharatnatyam.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in