

ஹரியானாவில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டதாகக் குற்றம் சாட்டிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ஹரியானா வாக்காளர் பட்டியலில் பிரேஸில் பெண் மாடலின் படம் இருப்பதைச் சுட்டிக்காட்டிப் பேசினார்.
நாட்டில் பல மாநிலங்களில் வாக்கு திருட்டு நடைபெறுவதாக மாநிலங்களை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். அதனடிப்படையில், பிஹாரில் நாளை (நவ. 6) முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற நிலையில் தில்லியில் ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைப் போலவே ஹரியானாவிலும் வாக்குகள் திருடப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டினார். செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி கூறியதாவது:-
“ஹரியானா தேர்தலில் முறைகேடு நடந்ததாலேயே காங்கிரஸ் கட்சியால் வெல்ல முடியவில்லை. அந்தச் சட்டமன்ற தேர்தலில் கருத்து கணிப்புகள் அனைத்தும் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கூறியிருந்தன. ஆனால், ஹரியானாவில் மட்டும்தான் தேர்தல் வரலாற்றிலேயே அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தது. தபால் வாக்குகளுக்கும் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கும் தொடர்பே இல்லை. ஹரியானாவில் 25 லட்சம் வாக்காளர்கள் பொய்யானவர்கள் என்பதற்கு நம்மிடம் ஆதாரங்கள் உண்டு. ஒவ்வொரு எட்டு வாக்காளர்களிலும் ஒருவர் பொய்யானவர்.
இந்தத் தேர்தலில் 22,000 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதில் பெண் ஒருவர் மட்டும் 22 முறை 10 வாக்குச்சாவடிகளில் பல பெயர்களில் வாக்களித்துள்ள ஆதாரம் கிடைத்துள்ளது. இதிலிருந்தே இது மையப்படுத்தப்பட்ட நடவடிக்கை என்பது தெரிகிறது. ஆனால் உண்மையில் அவர் பிரேஸில் நாட்டைச் சேர்ந்த மாடல். அவருடைய படத்தைப் பயன்படுத்தி வாக்காளர் அடையாள அட்டையைத் தயாரித்துள்ளார்கள்.
இந்திய இளைஞர்களே, இதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன், ஏனென்றால் இது உங்கள் எதிர்காலத்தைப் பற்றியது... நான் தேர்தல் ஆணையத்தை கேள்விக்குள்ளாக்குகிறேன், இந்தியாவில் ஜனநாயக செயல்முறையை நான் கேள்வி கேட்கிறேன், எனவே நான் அதை 100% ஆதாரத்துடன் செய்கிறேன். காங்கிரஸின் மகத்தான வெற்றியை தோல்வியாக மாற்ற ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டது என்பது எங்களுக்குத் தெரியும். நான் கூறும் குற்றச்சாட்டுக்கு 100% ஆதாரங்கள் உள்ளன. ஹரியானாவின் 2 கோடி வாக்காளர்களின் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளன.
ஒரே புகைப்படம் மீண்டும் மீண்டும் வருவதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கிறது. வாக்குசாவடி எண் 508, 431 ஆகிய இரண்டு வாக்குச்சாவடிகளில் மட்டும் ஒரு இளைஞர் 14 முறை வாக்குகளைப் பதிவிட்டுள்ளார். அதேபோல் 130, 131 ஆகிய வாக்குச்சாவடிகளில் இன்னொரு இளைஞர் 18 வாக்குகளைப் போட்டுள்ளார். இவர்களை எல்லாம் தேர்தல் ஆணையம் ஒரு நொடியில் நீக்கியிருக்க முடியும். அதற்குச் செயற்கை நுண்ணறிவு கூட இல்லை. ஆனால், அவர்கள் அதைச் செய்யவில்லை. ஏனென்றால் அவர்கள் பாஜகவுக்கு உதவுகிறார்கள். ” என்றார்.
Lok Sabha LoP Rahul Gandhi said, We have crystal clear proof that 25 lakh voters (in Haryana) are fake, that they either don't exist or they are duplicate or are designed in a way for anybody to vote...1 in 8 voters in Haryana are fake.