பங்குச் சந்தையில் நடந்துள்ள முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முழுமையாக நிறைவடைந்த நிலையில் பாஜக 240 இடங்களிலும், காங்கிரஸ் 99 இடங்களிலும் வென்றுள்ளன. ஆட்சியமைப்பதற்காக தனிப் பெரும்பான்மையைப் பெறாததால், கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை பாஜக அமைக்கிறது.
இந்நிலையில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பங்குச் சந்தையில் ரூ. 38 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி பேசியதாவது:
“மே 13 2024 அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்குகளை ஜூன் 4-க்கு முன்னதாக வாங்கச் சொன்னார். இது சில்லறை முதலீட்டாளர்கள் பங்குகள் வாங்குவதை தெளிவாக குறிக்கிறது. மே 19-28 வரை பிரதமர் மோடியும் ஜூன் 4-ல் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் இந்தியப் பங்குச் சந்தை புதிய சாதனையைப் படைக்கும் என தொடர்ந்து கூறினார். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் திட்டமிட்டு முறைகேடு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 4 அன்று தேர்தல் முடிவுகள் வெளியானது. முன்னதாக ஜூன் 3 அன்று பங்குச் சந்தை உயர்ந்தது. உடனடியாக அடுத்த நாளில் சரிந்தது. அதற்குள் பலரும் பணம் சம்பாதித்தனர். மோடி மற்றும் அமித் ஷாவின் பேச்சால் பங்குச் சந்தையில் அதிக முதலீடுகள் நடந்துள்ளது. பங்குச் சந்தையில் ரூ. 38 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது. பங்குச் சந்தையில் லாபம் ஈட்ட கருத்து கணிப்புகளை போலியாக வெளியிட்டனர். போலியான கருத்து கணிப்புகளை நடத்தியவர்களை விசாரிக்க வேண்டும். வெளிநாட்டு முதலீட்டார்களுக்கும் கருத்து கணிப்பு நடத்தியவர்களுக்கும் தொடர்பு உள்ளது. பங்குச்சந்தையில் நடந்துள்ள முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.
முன்னதாக, என்டிடிவி பிராஃபிட்டுக்கு அளித்த நேர்காணலில் பங்குச் சந்தை குறித்து பிரதமர் மோடி கூறியதாவது:
“ஜூன் 4-ல் முந்தைய சாதனைகள் அனைத்தையும் பங்குச் சந்தை முறியடிக்கும். தேர்தல் முடிவுகள் வெளியானவுடன், அந்த வாரம் முழுக்க பங்குச் சந்தையில் பணிபுரிபவர்கள் சோர்வடையும் அளவுக்கு அதன் செயல்பாடு இருக்கும். பங்குச் சந்தையில் சாதாரண மக்கள் முதலீடு செய்யும் அளவு அதிகரித்தால், அது பொருளாதாரத்துக்கு நல்லது. துணிச்சலான முடிவுகளை எடுப்பதற்கான பசியுணர்வு ஒவ்வொரு குடிமக்களிடமும் அதிகரிக்க வேண்டும்” என்றார்.
அதேபோல, "இதற்கு முன்பு இதைவிட மோசமான சரிவையெல்லாம் பங்குச் சந்தை கண்டுள்ளது. இதைத் தேர்தலுடன் பொருத்திப் பார்க்கக் கூடாது. எனினும், வதந்திகள் பரவியுள்ளன. ஜூன் 4-க்கு பிறகு பங்குச் சந்தை ஏற்றம் அடையும் என்பதால், முன்கூட்டியே பங்குகளை வாங்கிவிடுங்கள்" என அமித் ஷா கூறியிருந்தார்.