
தில்லியில் உள்ள இனிப்புக் கடை ஒன்றில் தீபாவளி இனிப்புகள் தயாரித்த காணொளியை ராகுல் காந்தி சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.
நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசு மட்டுமன்றி இனிப்புகள் நமது இல்லங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நாடு முழுவதிலும் உள்ள இனிப்பகங்களில் தீபாவளியை ஒட்டி மக்கள் கூட்டம் களைகட்டும்.
தில்லியின் பழைய தில்லி பகுதியில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த கந்தேவாலா இனிப்பகத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தீபாவளி இனிப்பு செய்த காணொளி ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், இனிப்பகத்தாரின் பயணம் மற்றும் தீபாவளி இனிப்புகள் பற்றிய பல கேள்விகளைக் கேட்டவாறே ஜாங்கிரி, முருக்கு உள்ளிட்ட பலகாரங்களை அவரே சமைத்தார்.
இதைத் தொடர்ந்து ராகுல் காந்தி சமூக ஊடகப் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
“பழைய தில்லியில் உள்ள புகழ்பெற்ற வரலாற்று சிறப்புமிக்க கந்தேவாலா இனிப்புக் கடையில் இமார்டி மற்றும் கடலைமாவு லட்டுகளை தயாரிக்க முயன்றேன். நூற்றாண்டுகள் பழமையான இந்த மதிப்புமிக்க கடையின் இனிப்பு இன்றும் அப்படியே உள்ளது. தூய்மை, பாரம்பரியம் மற்றும் இதயத்தைத் தொடுவதாக உள்ளது. தீபாவளியின் உண்மையான இனிப்பு தட்டில் மட்டுமல்ல, உறவுகளிலும் சமூகத்திலும் உள்ளது. உங்கள் தீபாவளியை எப்படிக் கொண்டாடுகிறீர்கள், அதை எப்படி சிறப்பானதாக்குகிறீர்கள் என்று எங்களிடம் கூறுங்கள்” என்று பகிர்ந்துள்ளார்.