தமிழர்களின் குரலை அடக்கும் முயற்சி வெற்றிபெறாது: விஜய்க்கு ஆதரவாக ராகுல் பதிவு | Rahul Gandhi |

காங்கிரஸ் தலைவர்கள் பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாக்கூர், ஜோதிமணி, கிரிஷ் சோடங்கரைத் தொடர்ந்து...
ராகுல் காந்தி (கோப்புப்படம்)
ராகுல் காந்தி (கோப்புப்படம்)
1 min read

ஜனநாயகன் படத்தை மத்திய அரசு முடக்க நினைப்பது தமிழ்க் கலாசாரத்தின் மீதான தாக்குதல் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்திற்குத் தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, விசாரணை ஜனவரி 21 அன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வழக்கு தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விஜய்க்கு காங்கிரஸ் ஆதரவு

இதையடுத்து, ஜனநாயகன் படத்தின் மீதான தணிக்கை வாரியத்தின் நடவடிக்கைக்கு எதிராக திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் பலர் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர் தொடர்ச்சியாக விஜய்க்கு ஆதரவாகவும் பாஜகவுக்கு எதிராகவும் கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வுத் துறைத் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் தாக்கூர், ஜோதிமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்டோர் விஜய்க்கு ஆதரவுக்குரல் எழுப்பியுள்ளனர்.

முதலமைச்சர் ஸ்டாலினின் பதிவு

இதையடுத்து முதலமைச்சர் ஸ்டாலினும் தணிக்கை வாரியத்தைக் கண்டித்து கடந்த ஜனவரி 9 அன்று பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் “சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவற்றின் வரிசையில் தணிக்கை வாரியமும் மத்திய பாஜக அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது. கடுமையான கண்டனங்கள்” என்று பதிவிட்டிருந்தார்.

ராகுல் காந்தி ஆதரவு

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியும் விஜய்க்கு ஆதரவாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தைக் குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது:-

”தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ஜனநாயகன் படத்தை முடக்க நினைப்பது தமிழ்க் கலாசாரத்தின் மீதான தாக்குதல். மோடி அவர்களே! தமிழர்களின் குரல்களை அடக்குவதில் உங்களால் வெற்றி காணவே முடியாது” என்று பதிவிட்டுள்ளார்.

ராகுல் தமிழ்நாடு வருகை

கடந்த 2017-ல் விஜய் நடித்த மெர்சல் படத்திற்கு தணிக்கையில் இதே போன்ற பிரச்னை வந்தபோது ராகுல் காந்தி விஜய்க்கு ஆதரவாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். இதைத் தொடர்ந்து தற்போதும் விஜய்க்கு ஆதரவுக் குரல் கொடுத்துள்ளார். மேலும், நீலகிரி மாவட்டம் கூடலூரில் தனியார் பள்ளியின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு பொங்கல் கொண்டாட ராகுல் காந்தி இன்று தமிழ்நாடு வந்துள்ள நிலையில், அவரது பதிவு கவனம் பெற்றிருக்கிறது.

Summary

Rahul Gandhi has posted that the The Information and Broadcast Ministry’s attempt to block ‘Jana Nayagan’ is an attack on Tamil culture.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in