
பிஹாரில் நடைபெற்ற இண்டியா கூட்டணி நிகழ்வின்போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது தாயாருக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை முன்வைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிஹார் மாநிலம் தர்பாங்காவில் இண்டியா கூட்டணியின் வாக்காளர் அதிகார யாத்திரை பேரணி நேற்றைக்கு முந்தைய தினம் (ஆக. 27) நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பொதுக்கூட்டத்திற்குப் பிறகு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மொஹமத் ரிஸ்வி (எ) ராஜா எனப்படும் நபர், பொதுக்கூட்ட மேடையில் நின்றுகொண்டு பிரதமர் மோடி மற்றும் மறைந்த அவரது தாயாருக்கு எதிராக அவதூறு வார்த்தைகளை கூறியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பாஜக சார்பில் தலைநகர் பட்னாவில் உள்ள கோட்வாலி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, தற்போது மொஹம்த் ரிஸ்வி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு, ஒரு நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது, `ராகுல் காந்தியிடம் சிறிதளவு அவமானம் மீதமிருந்தாலும், மோடிஜியிடமும் அவரது மறைந்த தாயாரிடமும் இந்த நாட்டு மக்களிடமும் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். கடவுள் அனைவருக்கும் ஞானத்தைக் கொடுக்கட்டும்’ என்றார்.
மேலும், `இரண்டு நாள்களுக்கு முன்பு நடைபெற்ற சம்பவம் அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. மோடிஜியின் தாய் ஒரு ஏழைக் குடும்பத்தில் வாழ்ந்து, தனது குழந்தைகளை நல் மதிப்புகளுடன் வளர்த்து, தனது மகனை நம்பிக்கைக்குரிய தலைவராக மாற உதவினார்.
அத்தகைய வாழ்க்கைக்கு அவமானகரமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது இந்திய மக்களால் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாத ஒன்றாகும். அரசியல் வாழ்க்கையில் இதைவிடப் பெரிய வீழ்ச்சி எதுவும் இருக்க முடியாது, அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்’ என்றார்.