மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது ஒரு மாத ஊதியத்தை நிதியுதவியாக வயநாடு வெள்ளப் பாதிப்பு மீட்புப் பணிகளுக்கு அளித்துள்ளார்.
பேரிடரால் இழப்புகளைச் சந்தித்த மக்கள் தங்களுடைய வாழ்க்கையை மீட்டெடுப்பதற்காக அனைவரும் உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
"வயநாட்டிலுள்ள சகோதர, சகோதரிகள் பெரும் அழிவைச் சந்தித்துள்ளார்கள். கற்பனை செய்துபார்க்க முடியாத அளவுக்குப் பேரிழப்புகளை எதிர்கொண்டுள்ள அவர்கள் மீண்டு வர நம் உதவி தேவை. மீட்பு மற்றும் மறுகட்டமைப்புப் பணிகளுக்காக நான் எனது ஒரு மாத ஊதியத்தை முழுமையாக அளித்துள்ளேன். சக இந்தியர்களும் தங்களால் முடிந்த உதவியைச் செய்தால் சிறிய மாற்றம் நிகழும்.
வயநாடு நம் நாட்டின் மிகவும் அழகான பகுதி. காங்கிரஸ் செயலி மூலம் கேரள காங்கிரஸுக்கு மிகவும் பாதுகாப்பாக நிதியுதவியை அளிக்கலாம்" என்று எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 30 அன்று நிலச்சரிவு ஏற்பட்டது. சூரல்மலா, முண்டகை போன்ற கிராமங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதில் 200-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளார்கள். மீட்புப் பணிகளுக்குத் தேவையான நிதியைத் திரட்டுவதற்காக கேரள காங்கிரஸ் சார்பில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.