2024 மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் ரேபரலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி 15 ஆண்டுகள் எம்.பி.யாக இருந்துள்ளார். 2019 மக்களவைத் தேர்தலில் ஸ்மிருதி ராணியிடம் தோல்வியைச் சந்தித்தார்.
ரேபரலியும் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதி. இந்தத் தொகுதியில் சோனியா காந்தி போட்டியிட்டு வந்த நிலையில், அவர் மாநிலங்களவைக்குத் தேர்வானார். சோனியா காந்தி, ரேபரலியில் கடந்த 2004 முதல் தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில் இந்த இரு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் யார் என்ற கேள்விகள் இருந்து வந்த நிலையில், ரேபரலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமேதி தொகுதியில் கிஷோரி லால் சர்மா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமேதி, ரேபரலி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் ஐந்தாவது கட்டமாக மே 20 அன்று தேர்தல் நடைபெற உள்ளது.