வயநாட்டில் இண்டியா கூட்டணிக்குள் போட்டி: ராகுல், ஆனி ராஜா வேட்புமனு தாக்கல்

இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மூத்த தலைவர் ஆனி ராஜாவும் வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
ராகுல் காந்தி, ஆனி ராஜா
ராகுல் காந்தி, ஆனி ராஜா

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாட்டில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மூத்த தலைவர் ஆனி ராஜாவும் வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

ராகுல் காந்தி மீண்டும் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த மக்களவைத் தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி 4.31 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

கேரளத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 26-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கு வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 4 கடைசி நாள்.

இந்த நிலையில், ராகுல் காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு அவர் பேரணியில் ஈடுபட்டார்.

பேரணியில் ராகுல் காந்தி பேசியதாவது:

"வயநாட்டில் உள்ள ஒவ்வொரும் என் மீது அன்பு, மரியாதை கொண்டு உங்களில் ஒருவராகவே என்னை நடத்தியுள்ளீர்கள். நாடாளுமன்றத்தில் உங்களுடைய பிரதிநிதியாக இருப்பது எனக்குக் கிடைத்த பெருமை.

உங்களை நான் வாக்காளர்களாகப் பார்க்கவில்லை. என் இளைய சகோதரி பிரியங்கா காந்தியைப்போலவே உங்களையும் பார்க்கிறேன். வயநாட்டில் உள்ள வீடுகளில் எனக்கு சகோதரிகள், சகோதரர்கள், தந்தைகள் மற்றும் தாய்மார்கள் உள்ளார்கள். இதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

வயநாட்டில் வனவிலங்குகள் பிரச்னை, மருத்துவக் கல்லூரி பிரச்னை உள்ளன. இந்தப் போராட்டத்தில் வயநாடு மக்களுடன் துணை நிற்கிறேன். மருத்துவக் கல்லூரி விஷயத்தில் அரசுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சித்தோம். முதல்வருக்கு கடிதங்கள் எழுதியுள்ளேன். ஆனால், துரதிருஷ்டவசமாக அவை எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. தில்லி மற்றும் கேரளத்தில் நமக்கான அரசு அமைந்தவுடன், இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும்" என்றார்.

இந்தப் பேரணியில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் கே.சி. வேணுகோபால், தீபா தாஸ்முன்ஷி, கேரள காங்கிரஸ் தலைவர் எம்எம் ஹசன், கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.

வயநாடு தொகுதியில் இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மூத்த தலைவர் ஆனி ராஜா போட்டியிடுகிறார். இவரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு ஆனி ராஜா கூறியதாவது:

"இடது முன்னணி வேட்பாளராக என் மீதுள்ள எதிர்பார்ப்புகள் என்னவென்பதைப் புரிந்துகொள்ள மக்களுடன் மக்களாக இருக்கிறேன். நாங்கள் உங்களுக்கு வாக்களித்தால், நீங்கள் தொகுதியில் இருப்பீர்களா என்று கேள்வியெழுப்புகிறார்கள். இந்தத் தொகுதியிலிருந்து நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், நிச்சயம் இங்குதான் இருப்பேன் என அவர்களுக்கு வாக்குறுதியளித்துள்ளேன்.

உங்களுடன்தான் இருப்பேன் என்று சொன்னவுடன் அவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். வனவிலங்குகள் பிரச்னை இங்கு நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ளது. ஏற்கெனவே உள்ள சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது அவசியம். கேரள சட்டப்பேரவையில் இதற்கு சாத்தியமில்லை. நாடாளுமன்றத்தில்தான் சாத்தியம்" என்றார் அவர்.

வயநாடு தொகுதியில் பாஜக சார்பில் அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் கே. சுரேந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in